கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது அமுலில் உள்ள பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும் போது பொது மக்கள் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மாற்றியமைக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது மக்கள் நெருக்கடிக்குள்ளாகுவதை அவதானிக்க முடிகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 பெருந்தொற்று வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை ஆரம்ப காலத்தில் இருந்து முன்னெடுத்துள்ளது. இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
கொவிட் தாக்கத்தினால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 31 ஆம் திகதியும்,4 ஆம் திகதியும் தற்காலிகமாக தளர்த்தப்படும்.
பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் பொது வர்த்தக நிலையங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்யும் போதும், பொது இடங்களுக்கு செல்லும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் எதிர்வரும் நாட்களில் திருத்தம் செய்யப்படும். நேற்று முன்தினம் பணயத்தடை தளர்த்தப்பட்ட போது பொது மக்கள் நெருக்கடிகளை எதிர் கொண்டமையினை அவதானிக்க முடிகிறது.
கொவிட் 19 பெருந்தொற்று வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் அதி அவதானத்துடனும் செயற்பட வேண்டும். கடந்த காலங்களை காட்டிலும் மக்கள் தற்போது பொறுப்புடன் செயற்படுகின்றமை வரவேற்கத்தக்கது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை வெற்றிக் கொள்ள முடியும் என்றார். -வீரகேசரி பத்திரிகை-
Akurana Today All Tamil News in One Place