அதிகாரத்தை பயன்படுத்தி எம்மை மெளனிக்கச் செய்ய முடியாது : மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல

இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தை பயன்படுத்த முயற்சிக்குமானால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையி்ல்,

நாட்டினதும் மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி,  நினைத்த பிரகாரம் சட்டமூலங்களை ஏற்படுத்த திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராக போராடுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.

சந்தர்ப்பவாத சில தேரர்கள் பின்வாங்கினாலும் இவ்வாறான அச்சுறுத்தல் அடக்குமுறைகளுக்கு பயந்து, மீகெட்டு வத்தே குணானந்த தேரரின் வம்சத்தில் செயற்படும் எந்தவொரு பிக்குவும் மெளனித்திருக்கப்போவதில்லை. ஒருசிலர் எம்மை அச்சுறுத்தி, அடக்கி எங்களது வாய்யை மூடிவிட பார்க்கின்றனர்.

மேலும் மாகாணசபை முறைக்கு நாங்கள்  எதிர்ப்பு. யார் எதிர்த்தாலும் எவ்வாறு எதிர்த்தாலும் மாகாணசபை தேர்தலை நடத்தியே ஆகுவோம் என சிலர் தெரிவிக்கின்றனர்.

அப்படியானால் இதுதொடர்பாக யார் எதிர்த்தாலும், யார் அச்சுறுத்தினாலும் மாகாணசபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்வோம் என்பதை இவர்களுக்கு தெரிவிக்கின்றோம்.

2015 இல் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து செல்லும்போது அவருடன் யார் இருந்தார்கள். அவரை பாதுகாக்க யார் வந்தார்கள், சாதாரண பொது மக்களே தங்கல்லைக்கு பஸ்களில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதனால் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவு இன்றும் இருக்கி்ன்றது. அதனால் ஆட்சியாளர்கள் ஒருசிலரின் அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு பயந்து நாங்கள் ஒளிந்துகொள்ளப்போவதில்லை என்பதை தெளிவாக தெரிவிக்கின்றோம் .

மேலும் நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் செளபாக்கிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் இன்றும் ஆதரவளிக்கின்றோம்.

அதில் இருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. ஆனாலும் அரசாங்கத்தில் இருக்கும் தேவையில்லாமல் உளரிக்கொண்டு இருப்பவர்களுக்கும் அதிகார மோகத்தில் இருப்பவர்களுக்கும் நினைத்த பிரகாரம் செயற்பட நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

-வீரகேசரி பத்திரிகை-(எம்.ஆர்.எம்.வசீம்)

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter