நாட்டில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட பெண்கள் அணியும் முகத்திரைக்கான தடையும் நீங்கியுள்ளது என பொலிஸ் திணைக்களம் தெளிவுபடுத்தியிருந்தாலும் முஸ்லிம் பெண்கள் தற்போதைய சூழ்நிலையில் பொது இடங்களில் முகத்திரை அணிவதால் ஏற்படக் கூடிய அசாதாரண நிலைமைகளை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் இது விடயத்தில் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்கனவே முஸ்லிம் பெண்களின் முகத்திரை தொடர்பில் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின் நிலைப்பாட்டிலே தொடர்ந்தும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப், புர்கா மற்றும் முகத்திரைக்கான தடை நீக்கம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரால் எவ்வித தெளிவுகளும் முன்னர் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுகளை வழங்குமாறு முஸ்லிம் சமய, விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பொலிஸ் மாஅதிபருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.
அமைச்சர் ஹலீமின் கடிதத்துக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுள் ஒருவரான அஜித் ரோஹன தெளிவு வழங்கியுள்ளார்.
நிகாப், புர்கா மற்றும் முகத்திரைக்கான தடை அவசர காலச் சட்டத்தின் கீழேயே அமுலுக்கு வந்தது. தற்போது அவசரகாலச் சட்டம் அமுலில் இல்லை என்பதால் அத்தடையும் அமுலில் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதும் அச்சட்டத்தின் கீழ் அமுலுக்கு வந்த முஸ்லிம் பெண்களின் முகத்திரைக்கான தடையும் நீங்கியுள்ளது என உலமா சபையின் சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கிறார்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகார செயலாளர் மௌலவி அர்கம் நூராமித் தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்களின் முகத்திரை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மக்களுக்கு வழங்கிய வழிகாட்டல் நிலைப்பாட்டிலே தொடர்ந்தும் இருக்கிறது எனவும் அவர் கூறினார்.
உலமா சபை செப்டெம்பர் 1 ஆம் திகதி அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆடையைத் தெரிவு செய்து அணிவது ஒவ்வொரு மனிதனினதும் பெண்ணினதும் அடிப்படை மனித உரிமையாகும். இலங்கையின் அரசியல் யாப்பிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதிய சம்பவங்களினையடுத்து நாட்டில் ஓர் அசாதாரண நிலைமை உருவானது. இந்நிலையில் அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிகாபும் தற்காலிகமாக தடைக்கு உள்ளாக்கப் பட்டது. அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நீக்கப்பட்டது. அத்தோடு விஷேட அரசாங்க வர்த்தமானியொன்றும் வெளியிடப்பட்டது. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பாதுகாப்பு படையினரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு வர்த்தமானி மூலம் அனுமதி வழங்கப்பட்டது. ஏப்ரல் 21 தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட அச்ச உணர்வுக ளிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.
இவ்வாறான தற்போதைய நிலையில் முஸ்லிம் பெண்கள் பகிரங்க இடங்களில் அணியும் முகத்திரை அசாதாரண நிலைமைகளை உருவாக்கலாம். ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் இனவாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்காத வகையில் நாம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli
Akurana Today All Tamil News in One Place