மறைந்த தலைவர் அஷ்ரஃபின் அரசியல் வரலாற்றுப் பயணம் இடைநடுவில் கருக்கப்பட்ட துயர சம்பவத்தால் துவண்டுபோய் நிலைகுலைந்தது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் களம் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்று அவரது வீறு நடையைத் தொடர முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டு தான் இன்னும் இருக்கின்றது.
கடந்து சென்ற இரண்டு தசாப்த காலங்களின் ஓவ்வொரு நிமிடங்களும் அந்த உண்மையை பறைசாற்றிக் கொண்டிருந்தன என்ற உணர்வை குறிப்பாக வடக்கு,கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகம் நன்றாக அறியும். அந்த வெறுமை என்றுதான் தொலையுமோ என்று அவர்கள் இன்றுவரை ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர் விட்டுச் சென்ற உரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றக் கூடிய எந்தவொரு நம்பிக்கையூட்டும் நகர்வுகளையும் இற்றை வரை காண முடியாமல் இருக்கின்றது.
மறைந்த தலைவர் அஷ்ரஃபின் வாழ்க்கை வரலாற்றில் மறுமலர்ச்சிக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் போர்க்களங்களைக் கண்டோம். இலக்கிய உலகின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் எதிர்காலத்திற்கும் படிக்கட்டுகளாக இருந்தன. அவரது உள்ளத்து உணர்ச்சிகள் அருவியாய் வழிந்தன. அலை கடலாய் ஆர்ப்பரித்ததனைக் கண்டோம். மலைபோல்ஓங்கி உயர்ந்து வடிவெடுத்து வியப்பூட்டின. இருட்டில் வழிதவறிய மக்களுக்கு கலங்கரை விளக்கமாக நின்று பணி செய்தன. இன்னும் எத்தனையோ விந்தைகளை அவர் வெளிப்படுத்தினார்.
1980 களில் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்கள் வடக்கு, கிழக்கில் அட்டகாசம் புறிந்து கொண்டிருந்த அன்றைய பின்னணியில் சில முஸ்லிம் இளைஞர்களும் அந்த ஆயுதக் கவர்ச்சிக்குள் அள்ளுண்டு சென்று ஆபத்தான நிலைமையைக் தோற்றுவித்ததனால் கிழக்கு முஸ்லிம்களுக்கிடையில் மிகப் பெரிய ஒரு பதற்றமான சூழல் வியாபித்தது. அந்த நிர்க்கதியான சூழலில் அரசியல் ரீதியாகவும், சமூக நீதியாகவும் எந்த விதமான பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத வெறுமை நிலைமை தோற்றம் பெற்றது.
அவ்வாறான ஒரு பயங்கரமான சூழலில்தான் அஷ்ரஃபின் ஆளுமை மிக்க தலைமைத்துவம் தனியனாக உணர்ச்சிப் புயலாக வெளிக்கிளம்பியது. அவரது சிந்தனைகளாலும், அறிவு கூர்மையினாலும் அசாத்தியமான துணிச்சலினாலும் உந்தப்பட்ட ஒரு இளைஞர் அணி பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவரை அரவணைத்து உற்சாகமூட்டியது. அஷ்ரஃபின் முதலாவது பணியாக ஆயுதம் ஏந்திய முஸ்லிம் இளைஞர்களின் மத்தியில் சிந்தனை ரீதியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு மத்தியில் மனமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவ்வாறு தெளிவு பெற்ற இளைஞர்களைக் கொண்டு தனது அரசியல் பயணத்திற்கான அமைதிப்படையை உருவாக்கிக் கொண்டார்.
இளைஞர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய செயல் திறன், பேச்சாற்றல், வாதத்திறமை வலிமையான கொள்கைப் பற்றுதல் என்பன அஷ்ரஃபிடம் அணிகலன்களாக ஜொலித்ததனால் அவரின் ஈர்ப்புசக்திக்கு மிக பெரிய இளைஞர் அணித்திரட்சி குறுகிய காலத்தில் ஏற்பட்டதனைக் கண்டு அவர் மீது பொறாமைகொண்ட ஓரு கூட்டமும், கறுவிக் கொண்டு அவருக்கெதுராக களமிறங்கிய சம்பவங்களும் அந்தக் கட்டத்தில் பதிவாகத்தான் செய்தன. ஆறில் ஐந்து பெரும்பான்மையினைக் கொண்ட அரசு ஒரு புறமும், முஸ்லிம் தரப்பின் விடுதலை வேட்கையை விரும்பாத கூட்டம் மறுபுறமுமாக அவறின் வேகத்தைத் தணிப்பதற்கான பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தன.
அவ்வாறான ஆரம்ப காலத்தில் அவருடன் இணைந்து சமூகத்திற்காக எதனையும் இழந்து மனதாலும், உடலாலும், வாக்காலும் போராடத் துணிந்த அவரது செயலணியில் நானும் ஒருவனாக இருந்த காலங்கள்தான் எனது பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது என்பதில் மனநிறைவ டைகின்றேன்.
பொது வாழ்வு, பொன் காய்க்கும் இடமுமல்ல, புன்னகை பூக்கும் பூந்தோட்டமுமல்ல. அது போலவே அது பாலைவனமுமல்ல என்ற தத்துவம் அஷ்ரஃபின் ஆரம்பகால போராளிகளுக்கு நன்கு புரியும். அவர் ஆரம்பத்தில் ஓர் ஏற்றப்படாத விளக்காக இருந்தார். அதற்கு எண்ணெயும், திரியும் தேடி பக்குவமாய் ஒளியேற்றி அது படர்ந்து போகாமல் பாதுகாத்த பல போராளிகள் இன்று எம்மத்தியில் இல்லை. எஞ்சிய இன்னும் பலர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு அஞ்ஞான வாசம் இருக்கின்றனர். அவர்கள் எல்லோரையும் இந்த இடத்தில் மனத்திரையில் காண்கிறேன்.
1986 நவம்பர் 21ஆம் இகதி ‘பாஷா வில்லா’ மண்டபத்தில் கட்சியைப் பிரகடனப்படுத்தி விட்டு அவர் ஆற்றிய உரை இன்று எத்தனை பேரின் இதயங்களில் பதிந்துள்ளதோ தெரியாது.
முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற பொம்மைகள், நம்பிக்கை தளர்ந்த மூஸ்லிம் அரசியல், பேரினவாத செயல்பாடுகள், தாய்மொழி, எமது நம்பிக்கை, நாங்கள் யார், எங்கள் கடமை, மாகாண சபைகள், இரத்தம் சிந்துவதை நாம் விரும்பாதவர்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்கள், எமது கோரிக்கை, விடுதலை வெளிப்பாடு, முஸ்லிம் சமூகத்திற்குள்ள பொறுப்புணர்ச்சி என மேற்குறிப்பிட்ட முக்கியமான தலைப்புக்களில் அவர் நிகழ்த்தய அந்த உரையை ஓவ்வொரு முஸ்லிம் சகோதரரும் மீட்டிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவரது இலட்சியப் பாதையை விட்டு கடந்த 20௦ வருடங்களாக எவ்வளவு தாரம் விலகிப் போய்க் கொண்டிருக்கின்றோம் என்பதைப் புறிந்து கொள்ள முடியும்.
இன்று நம் நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக கருக்கொண்டுள்ள வெறுப்புச் சுவாலை என்பது நமது கொள்கை மாற்றத்தாலும், உள்வீட்டு காட்டிக்கொடுப்புக்களாலும், காலை வாரிவிட்டு காசு சேர்ப்பதாலும் வந்த வினைதான் என்பது தெளிவாக்கும், அந்த நீண்ட உரையின் பின் அவர் இவ்வாறு கூறுகிறார்.
எமது தலைமை உரையின் இறுதியாக நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் இது ஒன்றைத்தான் ஒரு கட்சியின் உருவாக்கம் ஓரு தனி மனிதனாலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படுகின்றது என்பது உண்மைதான். ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஒரு தனி மனிதனல்ல. ஒரே நோக்குள்ள பல மனிதர்கள் ஓரே சிந்தனையினராக ஓருமித்தும், ஊக்கத்தோடும், விடாமுயற்சியோடும், தியாகத்தோடும் உழைக்கும் போதுதான் அந்தக்கட்சி பல கிளைவிட்டு படர்ந்து செழிக்கின்து.
இருமறைக்கும், இருநபி மொழிக்கும் விரோதமான செயல்களை இத்தலைமைப்பீடத்தை உபயோகித்து நான் அறிந்தோ, அறியாமலோ செயற்பட முனைவதை நீங்கள் காணும் போது என்னைப் பின்தொடர்வதை நீங்கள் உடனே தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்’ என்று அவர் கர்வம் கலைந்த பெருந்தன்மையோடு இவ்வாறு கூறினார்.
அவரது கூற்றை செயலிலும் காட்டினார்.
முதல் 6 வருடங்கள் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தும் அடுத்த 6 வருடங்கள் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தும் எவ்வாறு சமூகத்தின் கெளவரத்திற்கு மெருகூட்டலாம் என செய்து காட்டினார். எந்தவொரு சந்தர்ப்பதிலும் தான் சார்ந்த சமூகத் இன் உரிமையை அவர் விட்டுக்கொடுத்த வரலாறு கிடையாது. அவரது சாதனைகள் பல இன்று மாற்றுக் கட்சியினராலும் வியந்து நினைவு கூரப்படுகின்றன. அவர் ஆரம்பித்து வைத்த சமூக விடுதலை சார்ந்த பல விடயங்கள் 20 வருடங்கள் கடந்த இன்றைய காலகட்டத்திலும் எவ்வித கவனிப்பாரற்று தூர்ந்து போன நிலையில் இருப்பது என்பது வேதனைக்குரிய விடயமாகும். பெரும் தேசியக்கட் சியின் பங்காளியாக இருந்த போது எவ்வாறு தன்மை மாறாமல் அரசியல் பயணத்தை எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு ஒரு சான்றுகோலாக அவர் இருந்தார்.
பேரினவாத தலைவர்களிடம் நல்ல பிள்ளைகள் என்ற பெயர்பெறுகின்ற ஓரே இலட்சியத்துடனும் தங்கள் பதவிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனும் இருக்கும், பெரும் தேசியகட்சிகளில் சங்கமமாகி போட்டியிடும், முஸ்லிம் வேட்பாளர்களின் கரங்களிடம் இன்னும் நாம் எமது சந்ததிகளின் எதிர்காலத்தை அடகு வைக்கப் போகின்றோமா என சிந்தித்து பாருங்கள் என்று மேடைகளில் முழங்கினார்.
முஸ்லிம்களும் சுயநிர்ணயமிக்க சம அந்தஸ்துள்ள தனித்தேசியமான ஒரு சமூகம் என்ற அடையாளத்தை கெளரவமாகப் பெற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்கள்தான் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். அவ்விலக்கை நோக்கிப் பயணிப்பதற்காகத்தான் தனியான அரசியல் பயணத்தை தொடங்கினார். அவரது சமகாலத்தில் வாழ்ந்த பல அசியல் தலைவர்களுடன் அளவளாவி போதிய விளக்கங்களையும் வழங்கி அவர்களின் உள்ளங்களில் ஒரு தனிப் பெரும் தலைவராக தன்மானத்தின் சின்னமாக நேர்மையான அரசியல்வாதியாக பிரபல்யம் அடைந்தார்.
தமிழ், முஸ்லிம் உறவுகள் தழைத்தோங்க வேண்டும் என்பதில் அலாதியான கரிசனை கொண்டிருந்தார். பல தமிழ் அரசியல் தலைவர்களுடன் அடிக்கடி கூடி கலந்துரையாடல்களை நடத்தி அவ்வப்போது எழுத்துருவில் உடன்படிக்கைகளையும் செய்து கொண்டதற்கு வலுவான ஆவணங்கள் சான்றாக உள்ளன. வடக்கு,கிழக்கு பிரதேசம் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற கோட்பாட்டில் பற்றுறுதியாக இருந்தார். அந்த பிரதேசத்துள் இரண்டு சமூகங்களும் அதிகார அலகுகளைப் பரஸ்பர புரிந்துணர்வுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது அவாவாகும். இதைப்பற்றி தமிழ் தலைவர்கள் நன்
கறிவார்கள்.
இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் ஓரு தனித்தேசிய உரிமையைக் கொண்டதாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே தலைவர் அஷ்ரஃபின் அசைக்க முடியாத வேண்டுதலாகும். தேசியவாதம் என்பது மனிதகுலத்தின் நீண்ட சமூக வரலாற்று வளர்ச்சியின் வெளிப்பாடாகும். ஒரு மக்கள் கூட்டத்தின் குறித்த தனித்துவத்தின் அடிப்படையில் சமுக ஒருமைப்பாடு, சமவாய்ப்பு, சமசந்தர்ப்பம், சமநீதி, பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஒரு ஜனநாயக அரசியல் பொருளாதார சமுக பண்பாட்டுக் கட்டமைப்பாகும்.
பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியல் அமைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மக்கள் சமூகமானது ஓரு தனித்த தேசமாகவரையறுக்க முடியும் என்பது நியதியாகும். இவ்வாறான தகைமைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகம் இலங்கையில் ஒரு தேசிய அந்தஸ்தை பெற்றுக் கொள்ள ஏன் முடியாது என்பது அவரது வாதமாகும்.
துரதிஷ்டவசமாக இவ்வாறான ஆழமான கூறுகளை புறிந்து கொள்ள முடியாதவர்களின் கைகளில் முஸ்லிம்களின் தலைவிதி இன்று சிக்கிச் சீரழிகின்றது. எதிர்கால சந்தஇயின் தனித்துவ உரிமைகளை தாரைவார்த்துக் கொடுக்கும் இந்நிலைமையை மாற்றுவதானால் முஸ்லிம் அரசியல் மீண்டும் அஷ்ரஃபின் சிந்தனைக்குத் திரும்பியேயாக வேண்டும். பிரிபடாத ஒருநாட்டிற்குள் 3 தேசியம் வாழ்கின்றது என்ற உண்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவே தலைவர் அஷ்ரஃபின் அடிப்படைக் கோட்பாடாகும்.
அவரது சிந்தனைகளும், செயல்களும் இன்றும் 20ஆவது திருத்த விவகாரத்தில் தொடர்புபட்டனவாகவுள்ளன. 12 1/2வீத வெட்டுப்புள்ளி, வடக்கு கிழக்கு விவகாரம், மாகாணசபை முறைமை மாற்றம் போன்ற விடயங்கள் பல்வேறு வகைகளாக இன்றைய பேசுபொருளாக மாறியுள்ளன. இவற்றிற்கெல்லாம் தெளிவான பதில்களை தலைவர் அஷ்ரஃப் 1999 ஓகஸ்ட் 18ஆம் இகதி வெளியாகிய ‘சநிநிகர்’ பத்திரிகையில் கேள்வி பதிலாக விளக்கியுள்ளார்.
வடக்கு,கிழக்கு இணைப்புக்கு எவ்வாறு அவர் தனது காத்திரமான எதிர்ப்பை வெளியிட்டாரோ அதை விட காட்டமாக வடக்கிலிருந்து கிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதையும் அவர் எுர்த்தார். இணைக்கும் போதும் பின்னர் நீதிமன்றத்தின் உதவியுடன் பிறிக்கும்போதும் மிகமோசமான வகையில் பழிவாங்கப்பட்டது வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
சிறுபான்மை சமுகங்களின் தனித்தேசிய அடையாளத்தை சிதைப்பதற்காகவே அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள தமிழ் முஸ்லிம்களின் சனப்பரம்பலில் மாற்றம் கொண்டுவரப்படுவதற்கு ஏதுவாக பெரும்பான்மை சமூகங்களை அம்மாவட்டங்களில் திட்டமிட்டுக் குடியேற்றியதனை யெல்லாம் அவர் குறிப்பிடுகின்றார்.
இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இருட்டறையில் கறுப்புப் பூனையைக் தேடும் அரசியலை முஸ்லிம் அரசியல் செய்து கொண்டிருக்கின்றது. பொதுவான சமூகம் சார்ந்த அஷ்ரஃபின் சிந்தனை முத்துக்களை குப்பையில் கொட்டி விட்டு வர்த்தகமயமான அரசியலை அதற்கு மாற்றீடாகக் கொண்டுவந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் அரசியல் சந்தையிலே விலை பேசிக் கொண்டி ருக்கின்றனர். எனவே, தலைவர் அஷ்ரபின் 20ஆவது நினைவு தினமான இன்று அவரை நினைவுகூர்ந்து நேசிக்கும் உள்ளங்களும் அவரது சிந்தனைகளைச் செவிமடுத்தோரும் நமது எதிர்கால சந்ததியினர் மீது சத்தியம் செய்து வர்த்தக அரசியலிலிருந்து விலகி அஷ்ரஃபின் கனவை நிறைவேற்ற உறுதி பூணவேண்டும்.
மு.த. ஹஸன் அலி…(முன்னாள் இராஜங்க அமைச்சர்) செயலாளர் நாயகம் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு
Akurana Today All Tamil News in One Place