துர்ப்பாக்கிய சம்பவங்களுக்கு தகுதியற்ற நிர்வாகங்களே காரணம் என்கிறார் பணிப்பாளர்
நாட்டில் உள்ள பள்ளிவாசல்களுக்கு நம்பிக்கை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தெரிவில் கடுமையான நிபந்தனைகள் விதிப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வக்பு சபையும் தீர்மானித்துள்ளன.
அனுராதபுரம் அசரிகம ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகியொருவர் அண்மையில் சக நிர்வாகி ஒருவரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
பணிப்பாளர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், “உழ்ஹிய்யா இறைச்சி பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் இடம்பெற்றுள்ள இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சம்பவம் நடந்த பிராந்தியத்திற்குப் பொறுப்பான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கள உத்தியோகத்தரிடமிருந்து பூரணமான அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது. அனுராதபுரம் பரசன்கஸ்வெவ பொலிஸிலிருந்தும் அச்சம்பவம் தொடர்பான அறிக்கையொன்றினை திணைக்களம் கோரியுள்ளது. அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் இது தொடர்பில் ஆராய்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு எதிராக திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
பள்ளிவாசல்களை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்படும் நிர்வாகிகள் தகுதியற்றவர்களாக இருப்பதே இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்களுக்குக் காரணமாகும். ஊரில் தகுதியானவர்கள் இருக்கும் நிலையில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். நிர்வாகிகளாக தெரிவு செய்யப்படுவோர் சமூகப்பற்றுள்ளவர்களாகவும் மார்க்கப்பற்றுள்ளவர்களாகவும் கல்வித்திறமையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் இன்று அரசியல் மற்றும் பண பலமுள்ளவர்களே பெரும்பாலான பகுதிகளில் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். பள்ளி நிர்வாகிகள் கொலை செய்யும் அளவுக்கு மாறியிருக்கிறார்கள் என்றால் அதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான சம்பவங்கள் எமது சமூகத்தை ஏனைய சமூகத்தினர் மத்தியில் தவறாக மதிப்பிடுவதற்கு காரணமாக அமையும்.
திணைக்களமும், வக்பு சபையும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவின்போது பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறன. இது தொடர்பான வழிகாட்டல்களும் விதிமுறைகளும் விரைவில் அமுல் நடத்தப்படும் என்றார்.
ஹஜ்ஜுப் பெருநாள் உழ்ஹிய்யாவுடன் தொடர்புபட்ட முரண்பாட்டையடுத்து பள்ளிநிர்வாகியான கட்டுத்தம்பி ஷரீப் எனும் 67 வயதான நபர் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட அறுவர் பரசன்கஸ்வெவ பொலிசாரினால் கைது செய்யப்பட்டு 26 ஆம் திகதி (நாளை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பள்ளிவாசல் நிர்வாகியாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒருவரே பிரதான சந்தேக நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் அவரது உறவினர்கள் எனவும் கூறப்படுகிறது.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை , பக்கம் 01- 26/8/2022
Akurana Today All Tamil News in One Place