நாடு மிகப் பெரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளது. அரசியல் நெருக்கடிகள் நீடிக்குமாயின் பொருளாதாரம் இன்னும் படுமோசமான நிலையை அடையும் என் பதில் ஐயமில்லை. நாடு அடைந்துள்ள மிக மோசமான நிலைக்கு தனியே இன்றைய ஆட்சியாளர்களையோ, அரசாங்கத்தையோ குற்றம்சாட்டி விட முடியாது. சுதந்திர இலங்கையை ஆட்சி செய்த எல்லா ஆட்சியாளர்களும் தமது சுயதேவைக்காக நாட்டை ஏப்பமிட்டு அதனை தற்போதைய நிலைக்கு தள்ளியுள்ளார்கள்.
ஆனால், தற்போது ஆட்சிப்பீடத்தில் உள்ள ஆட்சியாளர்கள் ஏனைய ஆட்சியாளர்களை விடவும் ஒரு படி மேலே சென்று பெளத்த மேலாதிக்க இனவாதத்தில் தமது அரசியலை கட்டியெழுப்பியதோடு, இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை குலைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்த பெளத்த இனவாத தேரர்களுடன் மிகவும் ஐக்கியமாக செயற்பட்டமையும், அவர்களின் பெளத்த மேலாதிக்கவாதத்திற்கு துணையாக இருந்து தமது அரசியலை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் மேற்கொண்ட நடவடிக்கைகளும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்குரிய வலுவான நடவடிக்கைகளை எடுக்காமையும் அவலநிலைக்கு மிக முக்கிய காரணமென்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இந்தப் பின்னணியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோஷங்களும் முன் வைக்கப்படுகின்றன. அரசாங்கத்திற்கு சார்பான கட்சிகளும், எதிர்க்கட்சிகளும், சட்டத்தரணிகளும் என பலதுறைகளைச் சேர்ந்தவர்களும் நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறை இல்லாமல் செய்யப்பட வேண்டுமென்றும், மீண்டும் 19ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை அமுல்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலுள்ள பெரும்பான்மையானவர்கள் நாடு இன்றைய நிலைக்குள்ளாவதற்கு 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு அதிகூடிய அதிகாரங்களை வழங்கியமையையும் சூட்டிக் காட்டுகின்றார்கள்.
இந்த 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆளுந் தரப்பிலுள்ள பங்காளிக் கட்சிகள் பலவும் ஆரம்பத்தில் எதிர்ப்புக்களை காட்டின. குறிப்பாக விமல்வீரவன்ச, உதயன்கம் மவில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட வர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படையாக முன் வைத்தார்கள்.
இந்தப் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களை தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு முன் வந்தார்கள். இதனால், ஆளுந் தரப்பில் எதிர்ப்புக்களை காட்டியவர்கள் தங்களின் ஆதரவு இல்லாமலே இந்த 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேறப் போகின்றது. அதனால் தங்களை ஜனாதிபதி புறக்கணிக்கலாம் என்பதற்காகவும், அமைச்சர் பதவிகளின் மீதுள்ள பற்றுதல் காரணமாகவும் ஆதரவு வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள்.
ஆகவே, 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேறுவதற்கு முழுக் காரணமாக இருந்தவர்கள் மேற்படி இரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால், நாட்டின் தற்போதைய சீரழிவுக்கு இந்த 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதான காரணமானவர்கள்.
இத்தகையதொரு பொல்லாங்கை செய்து விட்டு ‘முழுக் கோழியை விழுங்கிய கள்வர்’ போன்று இவர்கள் மெளனமாக இருக்கின்றார்கள். தங்களின் மீதுள்ள இந்தக் கறையை போக்குவதற்கு தமது பிரதேசங்களில் தமது ஆதரவாளர்களை ஏவிவிட்டு ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் திரைமறைவில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் நாங்களும் எதிர்ப்புத்தான் என்று மக்களுக்கு காட்டுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களினால் மாத்திரமே இவ்வாறு அடிக்கடி தாவிக் கொள்ளமுடியும். நாடு பற்றியோ சமூகம் பற்றியோ தீர்க்கமான கொள்கை இல்லாதவர்கள் இப்படித்தான் அடிக்கடி தமது சுயதேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய போது முஸ்லிம் சமூகத்தின் எதிர் காலத்திற்கும், பாதுகாப்புக்குமே ஆதரவு வழங்கினோம் என்று மேடை போட்டு மேதாவித்தனம் செய்தார்கள். ஆனால், இவர்களினால் இன்று வரைக்கும் முஸ்லிம் சமூகத்தின் எந்தவொரு தேவையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை.
இவர்களின் ஆதரவானது முழு நாட்டுக்கும் பாதக நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்களும், பொருளாதார நிபுணர்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த உறுப்பினர்கள் நாட்டுக்கே படுபாதக நிலையை ஏற்படுத்தியதுடன் மாத்திரமன்றி முழு நாட்டுக்கும், சமூகத்திற்கும் துரோகம் செய்துள்ளார்கள்.
தூரநோக்கற்ற செயற்பாடுகள் ஒரு போதும் நிலையான நல்ல பயனைக் கொடுக்காது. அதனால், தீங்குகளே ஏற்படும். முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமூக சிந்தனை என்பது துளிகூட கிடையாது என்பதை கசப்பாக இருந்தாலும் அவர்களின் ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும், அவர்களின் நடவடிக்கைகள், ஆளுமைகள் குறித்தும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் கடந்த கால தவறுகளில் இருந்து விடுபட முடியும். பெரும்பான்மையான மக்கள் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ள ஆபத்துக்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கு காரணமாக இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் முஸ்லிம்கள் வெட்கமடைய வேண்டியுள்ளது. இவர்கள் தான் எங்களின் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் முஸ்லிம்கள் உள்ளார்கள்.
சிங்கள மக்கள் நாட்டில் இனவாதம், மதவாதம், மொழிவாதம் தேவையில்லாத ஒன்றாகும் என்பதை உணரத் தலைப்படுகின்றார்கள். அதற்காக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அனைத்து இனங்களையும், மதங் களையும் மதித்து ஐக்கியத்துடன் வாழும் போது மாத்திரமே இலங்கையை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியும் என்றும் நம்புகின்றார்கள். அதற்குரிய வலுவான அரசியல் சூழலை ஏற்படுத்த முடியுமென்று பெளத்த இனவாதத்திற்கு பலியான சிங்கள மக்கள் உணர்ந்துள்ளார்கள். அது போன்று தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களும் உணர்ந்துள்ளார்கள்.
மக்களிடையே இன்று ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியானது அரசியல்வாதிகளின் தவறான முன்னெடுப்புக்களினால் உருவானதாகும். இதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் கட்சிகளும் விதிவிலக்கல்ல. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும், மக்கள் பிரதிநிதிகளின் சமூக அக்கறையில்லாத நடவடிக்கைகளும் வலுப்பெற்று நாட்டுக்கும் பாதக நிலையை தோற்றுவிக்கின்றவர்களாக அவர்கள் மாறியுள்ளார்கள். ஆட்சியாளர்களுக்கும், ஜனாதிபதிக்கும் எதிராக தேர்தல் காலங்களில் கூக்குரலிட்டவர்கள் தேர்தல் முடிந்த கையுடன் எந்தவொரு கூச்சமுமில்லாது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதோடு, ஜனாதிபதியின் அதிகாரங்களையும் வலுப்பெறச் செய்தார்கள். அது மட்டுமன்றி சுமார் 40 வருடத்திற்கு அதிகமான அரசியல் அனுபவத்தைக் கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பெயரளவில் நிர்வாகியாக்கினார்கள்.
இத்தகையதொரு நிலைக்கு பிரதமரை நிறுத்திவிட்டு தமது அனைத்து தேவைகளையும் பிரதமரிடமே கேட்டுக் கொண்டார்கள். ஜனாதிபதியை சந்திக்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கூட முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதில்மேல் பூனையாகவே இருக்கின்றார்கள். அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்காதா என்று ஏங்குகின்றவர்களும் உள்ளார்கள்.
அதேவேளை, தமக்கு அமைச்சர் பதவி வந்தது என்றும் அதனை சமூகத்திற்காக புறக்கணித்துள்ளதாகவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் முகநால் எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் எதனைச் செய்தாலும் சமூகத்திற்காகவே செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்வதற்கும், எழுதுவதற்கும் ஒரு கூட்டத்தினர் இருந்து கொண்டே இருக்கின்றார்கள்.
இதனை தவிர்க்கவும் முடியாது. எரிகின்ற வீட்டில் பிடுங்குகின்றவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளார்கள். இவர்களை அடையாளங் கண்டு ஒதுக்க வேண்டும். ஒரு நாடும், அங்குள்ள மக்களும் நலம்பெற வேண்டுமாயின் அரசியல்வாதிகளின் எல்லாவற்றையும் அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றவர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட வேண்டும். (M.S. தீன் -வீரகேசரி 17/4/22)
Akurana Today All Tamil News in One Place