தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மற்றுமொரு திருகுதாளம்

நாடு எங்கே செல்கிறது என்பது, ஒருவருக்கும்‌ தெரியாது. மக்கள்‌ எதிர்நோக்கும்‌ பொருளாதார பிரச்சினைகள்‌, எத்தனை ஆண்டுகளில்‌ தீரும்‌ என்றும்‌ கூற முடியாத நிலை உருவாகியிருக்கிறது. பிரச்சினைகள்‌ தீராதது மட்டுமல்ல; அவை நாளாந்தம்‌ வரலாற்றில்‌ ஒருபோதும்‌ காணாத வேகத்தில்‌ அதிகரித்தும்‌ செல்கின்றன.

சிறிதளவு உணவு வகைகளைத்‌ தவிர, நாட்டுக்குத்‌ தேவையான அனைத்தும்‌ வெளிநாடுகளில்‌ இருந்து இறக்குமதி செய்தே, இவ்வளவு காலமும்‌ பெற்றுக்‌ கொள்ளப்பட்டன. ஆனால்‌, அவற்றுக்குத்‌ தேவையான வெளிநாட்டுப்‌ பணத்தில்‌, ஒரு பகுதியை மட்டுமே, நாடு வருடாந்தம்‌ சம்பாதித்து வருகிறது. எனவே, வருடா வருடம்‌ நாட்டின்‌ வெளிநாட்டுக்‌ கடன்‌ தொகை அதிகரித்து வந்துள்ளது.

இந்த நிலையில்தான்‌, கொவிட்‌-19 பெருந்தொற்று நோய்‌ நாட்டைத்‌ தாக்கி, வெளிநாட்டு செலாவணியை நாட்டுக்குச்‌ சம்பாதித்துத்‌ தரும்‌ துறைகளைப்‌ பாதித்தது. இப்போது, எண்ணெய்‌ மற்றும்‌ எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள்‌, உணவு ஆகியவற்றை இறக்குமதி செய்யவும்‌ முன்னர்‌ பெற்ற கடனை மீளச்‌ செலுத்தவும்‌, வெளிநாட்டுப்‌ பணம்‌ இல்லாமல்‌ அரசாங்கம்‌ தவிக்கிறது. நாட்டின்‌ நிலையை அறிந்த வெளிநாடுகள்‌, கடன்‌ கொடுக்கவும்‌ தயங்குகின்றன.

அதேவேளை, வேறு சிலர்‌ தேசிய அரசாங்கத்தை நிறுவி, இந்தப்‌ பிரச்சினைகளைத்‌ தீர்க்க வேண்டும்‌ என்ற கருத்தையும்‌ பரப்பி வருகிறார்கள்‌. சிங்கள ஊடகங்களில்‌, இதற்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும்‌ வழங்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்துக்கு எதிராக, நாட்டில்‌ பெரும்‌ எதிர்ப்பு உருவாகி வரும்‌ நிலையில்‌, அந்த எதிர்ப்பைத்‌ தணிப்பதற்காக, ஆளும்‌ கட்சியிலிருந்தே இந்த ஆலோசனை முளைத்திருக்கவும்‌ கூடும்‌.

ஏற்கெனவே இந்தக்‌ கருத்தை, ஏறத்தாழ சகல எதிர்க்கட்சிகளும்‌ நிராகரித்துள்ள போதிலும்‌, அரசாங்கம்‌ நினைத்தால்‌ எதிர்க்கட்சிகளில்‌ ஒன்றை சேர்த்துக்‌ கொண்டு, தேசிய அரசாங்கத்தை நிறுவலாம்‌.

தேசிய அரசாங்கம்‌ என்ற எண்ணக்கருவுக்கு, 2019ஆம்‌ அண்டு ஏப்ரல்‌ மாதம்‌ வரை, இலங்கை அரசியலில்‌

சட்ட ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட ஒரு வரைவிலக்கணம்‌ இருக்கவில்லை. 2019ஆம்‌ ஆண்டு, அரசியலமைப்பின்‌ 19 ஆவது திருத்தம்‌ நிறைவேற்றப்பட்ட போதே, அந்த வரைவிலக்கணம்‌ உருவாக்கப்பட்டது. அதன்படி, பதவிக்கு வரும்‌ அங்கிகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி அல்லது சுயேச்சைக்‌ குழு, நாடாளுமன்றத்தில்‌ உள்ள ஏனைய கட்சிகளுடன்‌ இணைந்து அமைக்கும்‌ அரசாங்கமே தேசிய அரசாங்கமாகும்‌.

இது மிகவும்‌ சர்ச்சைக்குரிய விளக்கமாகும்‌. பதவிக்கு வரும்‌ கட்சி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக்‌ கொண்ட கட்சியுடன்‌ இணைந்து, ஓர்‌ அரசாங்கத்தை அமைத்தால்‌, அதுவும்‌ தேசிய அரசாங்கமாகுமா? இந்தச்‌ சட்டத்தின்‌ பிரகாரம்‌, “ஆம்‌” என்று தான்‌ கூற வேண்டும்‌.

அரசியலமைப்பில்‌ உள்ள இந்த வாசகத்தின்‌ உண்மையான நோக்கத்தை அறிய, அத்தோடு வரும்‌ அமைச்சர்களின்‌ எண்ணிக்கையைப்‌ பற்றிய வாசகத்தையும்‌ வாசிக்க வேண்டும்‌. தேசிய அரசாங்கம்‌ இல்லாத பட்சத்தில்‌, 30 அமைச்சர்களை மட்டுமே ஜனாதிபதியால்‌ நியமிக்க முடியும்‌. ஆனால்‌, அது தேசிய அரசாங்கமாக இருந்தால்‌ எண்ணிக்கையைப்‌ பற்றிய வரையறையின்றி அமைச்சர்களை நியமிக்கலாம்‌.

அதேவேளை, அரசியலமைப்பில்‌ இந்த விடயம்‌, அமைச்சர்களின்‌ எண்ணிக்கையைப்‌ பற்றிய வாசகத்தின்‌ கீழேயே வருகிறது என்பதால்‌, தேசிய அரசாங்கத்தின்‌ நோக்கமே, அமைச்சர்களின்‌ எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்‌. ஏனெனில்‌, தேசிய அரசாங்கத்தை எந்த நிலையில்‌ அமைக்கலாம்‌ என்பது அரசியலமைப்பில்‌ இல்லை.

குறிப்பிட்டதொரு விஞ்ஞானபூர்வ அடிப்படையில்‌, அமைச்சர்களை நியமித்தால்‌, சாதாரண அரசாங்கமாக இருந்தாலும்‌ தேசிய அரசாங்கமாக இருந்தாலும்‌, அமைச்சர்களின்‌ எண்ணிக்கையை அரசாங்கம்‌ அதிகரிக்கத்‌ தேவையில்லை. ஆனால்‌, தமது உறுப்பினர்களுக்கு அமைச்சர்‌ பதவிகளை வழங்காவிட்டால்‌, அரசாங்கத்தில்‌ சேர கட்சிகள்‌ முன்வர மாட்டா. அதாவது, இது ஒரு வகையிலான இலஞ்சமாகும்‌. இது அரசியலமைப்பிலேயே அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, இரண்டு, மூன்று கட்சிகள்‌ ஒன்றிணைந்து, தேசிய அரசாங்கம்‌ அமைப்பதாக இருந்தால்‌, அரசாங்கத்தில்‌ சேரும்‌ கட்சிகள்‌, அமைச்சர்‌ பதவிகளை எதிர்ப்பார்க்கவும்‌ கூடாது. பிரதான கட்சி, இருக்கும்‌ 30 அமைச்சர்‌ பதவிகளை சிறு கட்சிகளுடன்‌ பகிர்ந்து கொள்ளத்‌ தயாராகவும்‌ இருக்க வேண்டும்‌. அவ்வாறான அரசியல்‌ நாகரிகம்‌ நாட்டில்‌ இல்லை.

அதேவேளை, அக்கட்சிகள்‌ குறிப்பிட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காகவே ஒன்று சேர வேண்டும்‌. அதாவது, அக்கட்சிகள்‌ ஏனைய விடயங்ளை முடிவு செய்யும்‌ முன்னர்‌, அதற்கான ஒரு திட்டத்தைத்‌ தயாரிக்க வேண்டும்‌. அத்திட்டம்‌ தயாரிக்கும்‌ விடயத்தில்‌ அவை தோல்வி கண்டால்‌, ஒன்றிணைவதில்‌ அர்த்தம்‌ இல்லை. முதலில்‌ ஒன்றிணைந்து, அமைச்சுப்‌ பதவிகளை பகிர்ந்து கொண்டு, பின்னர்‌ சம்பந்தப்பட்ட பிரச்சினையை தீர்க்க முற்படுவதென்பது நாட்டை ஏமாற்றும்‌ செயலாகும்‌.

இது போன்றதொரு நிலைமை 2007ஆம்‌ ஆண்டு ஏற்பட்டது. ஜனாதிபதி சந்திரிகாவின்‌ தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திலிருந்து, சில அமைச்சர்கள்‌ விலகிச்‌ சென்றதை அடுத்து, அரசாங்கம்‌ கவிழும்‌ நிலை ஏற்பட்டது.

அப்போது மக்கள்‌ விடுதலை முன்னணி, அரசாங்கத்தை பாதுகாக்க முன்வந்தது. ஆனால்‌, அம்முன்னணி அதற்காக ஒரு நிபந்தனையை விதித்தது. அதாவது, ஏற்கெனவே நாட்டில்‌ சகல கட்சிகளும்‌ இணக்கம்‌ காணப்பட்டதன்‌ பிரகாரம்‌, நிறைவேற்று ஜனாதிபதியின்‌ அதிகாரங்களை குறைக்கும்‌ வகையில்‌ சுயாதீன ஆணைக்குழுக்களை நிமிக்க வேண்டும்‌ என்பதே அந்த நிபந்தனையாகும்‌.

அதன்படி கூட்டரசாங்கத்தை உருவாக்கும்‌ முன்னர்‌, பொதுஜன ஐக்கிய முன்னணியும்‌ ஜே. வி.பியும்‌ ஆணைக்குழுக்களின்‌ அதிகாரங்கள்‌ போன்றவற்றைப்‌ பற்றி முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர்‌ கூட்டரசாங்கத்தை நிறுவின. பொதுவான இணக்கப்பாடு இருந்த போதிலும்‌, அதற்கு முன்னர்‌ சந்திரிகா இந்த விடயத்தை இழுத்தடித்துக்‌ கொண்டே இருந்தார்‌.

ஆனால்‌, மக்கள்‌ விடுதலை முன்னணியும்‌ அரசாங்கத்திலிருந்து விலகினால்‌ அரசாங்கம்‌ நிச்சயமாக கவிழும்‌ என்பதால்‌ ஆணைக்குழுக்களை நியமிக்கும்‌ வகையில்‌ அரசியலமைப்பின்‌ 17 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்‌.

அது ஒரு தேசிய அரசாங்கம்‌ அல்ல; என்றாலும்‌ எதற்காக ஒன்றிணைகிறோம்‌ என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக்‌ கொண்டு, பின்னர்‌ இணைவதற்கான சிறந்த உதாரணமாகும்‌. அவ்வாறு இல்லாவிட்டால்‌, இணையும்‌ கட்சிகளின்‌ தலைவர்கள்‌ பிரச்சினையை தீர்க்காது, அமைச்சர்‌ பதவிகளைப்‌ பகிர்ந்து கொண்டு, மக்கள்‌ பணத்தில்‌ சொகுசு வாழ்க்கை நடத்த சந்தர்ப்பம்‌ கிடைக்கும்‌. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்‌ காலத்தில்‌ அதுவே நடந்தது.

தற்போதைய நிலையில்‌, தேசிய அரசாங்கம்‌ அமைத்தாலும்‌ பிரச்சினைகளை தீர்க்க அத்தியாவசியமான நேர்மை என்ற பண்பு, அரச தலைவர்களிடம்‌ இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, ஜனாதிபதி நியமித்த பொருளாதார சபையை பார்த்தால்‌ அந்த நேர்மையின்‌ அளவு தெரிகிறது.

அச்சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள மஹிந்தானந்தவுக்கும்‌ ஜொன்ஸ்டனுக்கும்‌ தற்போதைய பொருளாதார நெருக்கடியை விளங்கிக்‌ கொள்ளவும்‌ விளக்கவும்‌ போதிய பொருளியல்‌ அறிவு இருகிறதா? அவர்கள்‌ ஐனாதிபதியினதும்‌ அரசாங்கத்தினதும்‌ சகல நடவடிக்கைகளையும்‌ நியாயப்படுத்திக்‌ கொண்டு, ஜனாதிபதியிடம்‌ நல்ல பெயரை பெற்றுக்‌ கொண்டு இருக்கிறார்கள்‌.

விவசாய அமைச்சர்‌ மஹிந்தானந்த, முன்னேற்பாடு எதுவும்‌ இல்லாமல்‌ ஐனாதிபதி விதித்த இரசாயன உர இறக்குமதித்‌ தடையை இன்னமும்‌ நியாயப்படுத்திக்‌ கொண்டு இருக்கிறார்‌. இது அரசாங்கத்தின்‌ நேர்மையை கேள்விக் குறியாக்குகிறது.

அதேபோல்‌, நாடு பெரும்‌ பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியும்‌ உயிர்கொல்லி நோயொன்றை எதிர்கொண்டும்‌ இருக்கும்‌ நிலையில்‌ அரசாங்கம்‌ சீனியின்‌ இறக்குமதி வரியை ஏறத்தாழ முற்றாகவே இரத்துச்‌ செய்தது. வர்த்தகர்கள்‌ அதற்கு ஏற்றவாறு சீனி விலையை குறைக்காதிருந்த போது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அரசாங்கத்தின்‌ நேர்மை எவ்வாறானது என்பதை புரிந்து கொள்ள முடியும்‌. இந்த நடவடிக்கையின்‌ மூலம்‌ வர்த்தகர்கள்‌, கோடிக்‌ கணக்கில்‌ (9,000 கோடி ருபாய்‌ என எதிர்க்கட்சிகள்‌ கூறின) மேலதிகமாக சம்பாதித்துக்‌ கொண்டனர்‌.

தேசிய அரசாங்கம்‌ அமைப்பதாக இருந்தால்‌, அரச தலைவர்கள்‌ மற்றவர்களின்‌ கருத்தை மதிக்கும்‌ பக்குவம்‌ உள்ளவர்களாக இருக்க வேண்டும்‌. ஆனால்‌, டொலருக்கு நிகரான ரூபாயின்‌ பெறுமதியைத்‌ தீர்மானிக்க, சந்தைக்கு இடமளிக்க வேண்டும்‌ என்று பொருளியல்‌ நிபுணர்கள்‌ கூறியதை அரசாங்கம்‌ ஏற்கவில்லை.

அதன்‌ காரணமாக, நாட்டுக்குள்‌ டொலர்‌ வருவது வெகுவாக நின்றுவிட்டதன்‌ பின்னரே, அரசாங்கம்‌ அந்த ஆலோசணையை ஏற்றது. இவ்வாறான நிலையில்‌ தேசிய அரசாங்கம்‌ என்பது வெறும்‌ ஏமாற்று வித்தையும்‌ மற்றோர்‌ திருகுதாளமும்‌ ஆகும்‌.

எம்.எஸ்.எம் ஐயூப் (தமிழ் மிரர் 16/3/2022)

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter