அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் நாட்டு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை அடுத்த வருடத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படுமென மத்திய வங்கியின் முன்னாள் பிரதி தலைவர் கலாநிதி டப்ள்யூ.ஏ.விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகளின் அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம், சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டில் ஆயிரக் கணக்கான சிறிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பலரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுகிறது.
இதேவேளை எரிபொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களினதும் விலைகள் மற்றும் முச்சக்கரவண்டி பயணத்துக்காக கட்டணம் முதல் தனியார் வைத்தியசாலைகளின் சேவைக்கான கட்டணங்கள் வரை உச்ச நிலைக்குச் சென்றுள்ளன. அடுத்தவாரம் முதல் பஸ் போக்குவரத்து கட்டணமும் 17வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.
சமையல் எரிவாயுவின் சிலிண்டர்களில் ஏற்படும் வாயுக் கசிவினால் நாடுதழுவிய ரீதியில் நூற்றுக்கணக்கான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கமோ சம்பந்தப்பட்ட நிறுவனமோ இதுவரை நஷ்ட ஈடு வழங்கவில்லை. அநேகர் எரிவாயு சிலிண்டர் கொள்வனவைத் தவிர்த்து மண்ணெண்ணைய் அல்லது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணைய்க்காக மக்கள் நீண்ட கியூவரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.
அரசாங்கம் பெரும்போக விவசாய செய்கைக்கு முன்பாக இரசாயன உர பாவனைக்கு தடைவிதித்து சேதன பசளையை பயன்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். விவசாயத்துக்கு உரம் வழங்குமாறு அவர்கள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அரசாங்கம் மாற்றுத்திட்டமொன்றினை வகுக்காது திடீரென இரசாயன உரத்துக்கு தடைவிதித்தமையே இதற்குக் காரணம். இதனால் நெல் உற்பத்தியும் பயிர்ச் செய்கையும் பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில் விவசாயிகளுக்கு சேதனப் பசளையை விநியோகிப்பதாக அரசாங்கம் உறுதியளித்து இந்தியாவில் இருந்து திரவ நைட்ரஜன் உரத்தினை பிளாஸ்டிக் கொள்கலன்களில் இறக்குமதிசெய்து சில பகுதிகளுக்கு விநியோகித்தது, இத்திட்டம் வெற்றியளிக்கவில்லை. நெற்பயிர்கள் இவ்வுரத்தினால் பயன்பெறவில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பெரும்போக விவசாய செய்கையிலிருந்தும் தவிர்ந்திருந்தனர்
போதியளவு மரக்கறிகள் பயிரப்படாமை காரணமாக மரக்கறியின் விலை வானளாவ உயர்ந்துள்ளது. எது இல்லாவிடினும் மரக்கறிச் சாப்பாட்டுடனாவது வயிற்றுப் பசியைப் போக்கிய மக்கள் இன்று அதனைக் கூட கொள்வனவு செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மறுபுறம் நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உட்பட ஏனைய இறக்குமதிப் பொருட்கள் தாங்கிய 1500 க்கும் மேற்பட்ட கொள்கலன்களை துறைமுகத்திலிருந்தும் வெறியேற்ற முடியாத நிலையில் அங்கேயே தேங்கிக் கிடக்கின்றன.
கொரோனா அச்சுறுத்தலையடுத்து வெளிநாடுகளில் கடமையாற்றிய சுமார் 2 இலட்சம் இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளார்கள். இதனால் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் வெளிநாட்டுச் செலாவணியிலும் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டை இந்த ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். இவ்விவகாரத்தில் அரசு துரிதமாக செயற்பட வேண்டும். துரதிஷ்டவசமாக நாட்டின் பிரதமர், நிதியமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் வெளிநாடுகளுக்குத் தேவையற்ற பயணங்களை மேற்கொள்கின்றனர். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய இக் காலகட்டத்தில் இவ்வாறான பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
எதிர்வரும் ஏப்ரலில் நாட்டில் உணவுப் பஞ்சமொன்று ஏற்படுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வு கூறியுள்ளார். நாட்டை ஆபத்திலிருந்து மீட்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறும் இன்றேல் மாற்று தீர்வொன்றுக்குச் செல்லுமாறும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை நாட்டை மீட்டெடுக்க புதிய தொலைநோக்கு பார்வை கொண்ட புதிய ஆட்சியொன்றினை நிறுவ வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அரசாங்கத்தை ஆளும் தரப்பினரே விமர்சிக்குமளவுக்கு ஆட்சி பீடம் நகைப்புக்குள்ளாகியுள்ளது. ‘இன்றைய பிரச்சினைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி அமைச்சரவை, நிதியமைச்சர் மற்றும் அரச அதிகாரிகள் பொறுப்புக்கூறவேண்டுமென ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறியுள்ளார்.
“எமது ஆட்சியின் முதல் இரண்டு வருடங்களைத் திட்டமிட்டபடி முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. இதற்கு கொரோனா தொற்றுப் பரவலே காரணம். அடுத்த மூன்று வருடங்களிலும் நிச்சயமாக நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்” என சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும். நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாட அனுமதிக்கக் கூடாது. சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவேன் என்ற வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மக்களைப் பட்டினிச்சாவுக்குள் தள்ளமாட்டார் என நம்புவோம்.
விடிவெள்ளி பத்திரிகை 2021-12-30
Akurana Today All Tamil News in One Place