வைத்தியசாலை, வியாபார நடவடிக்கை மற்றும் ஏனைய விடயங்களுக்கு செல்லும் முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசுவதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும் சம காலத்தில் இயல்பாகிவிட்டதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கவலை தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவி லிருந்து சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தெரிவானவர்களுக்கான உரித்துப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு மீராவோடை அமீர் அலி மண்டபத்தில் கடந்த திங்கட் கிழமை மாலை இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,-
“எவ்வாறான சவால்கள் வந்தாலும் எங்களது சமுதாயத்தை எல்லா வகையிலும் அவர்களை வலுவூட்டுவது எங்களது கடமை. இப்போது பொருளாதார ரீதியாக மாத்திரமல்ல, பொருளாதார ரீதியாக இருந்தவர்களின் பொருள் எல்லாவற்றுக்கும் எந்தவிதமாக உத்தரவாதமும் இல்லை. உடமைகள், உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை.
நாங்கள் தலைநிமிர்ந்து கௌரவமாக பல இடங்களுக்கு செல்கின்ற நேரத்தில், வியாபாரங்களை மேற்கொள்ளும்போது, வைத்தியசாலை மற்றும் ஏனைய விடயங்களுக்கு போகும் நேரத்தில் எங்களை ஏதோவொரு அடிப்படையில் பேசுவதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும் இயல்பாகிவிட்டது. அண்மையில் வைத்தியசாலை ஒன்றில் பிள்ளை பிறந்துள்ளதை பார்ப்பதற்கு அவருடைய மாமனார் போகும்போது தாதியர் ஒருவர் கூறினார்.
இன்னுமொரு சஹ்ரான் பிறந்துள்ளான் என்று. இவ்வாறு சொல்லுகின்ற அளவுக்கு எமது நிலைமை உள்ளது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.
இந்த நிலைமைகள் மாறும். இதனை சீர் செய்ய வேண்டும், பல சவால்கள் வந்த நேரத்திலும், பல பொய்களை கூறி, வைத்தியர்களைகூட வீணாக பழி சுமத்திய நிலைமைகள் எல்லாம் மாறி உண்மைகள் வெளிக்கின்றது. உங்களது பிரதிநிதிகளாக எங்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டுமோ அந்த கடமையை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பதவிகளையும் துறந்து மக்கள் பிரதிநிதிகளாக வந்திருக்கின்றோமேதவிர அரசாங்கம் தந்த அமைச்சு பதவிகளை எல்லாம் நாங்கள் துறந்து விட்டு அரசாங்கத்திற்கு இவ்வாறான விடயங்களை செய்தாக வேண்டும் என்ற அடிப்படையில் எங்களது மூச்சாக ஒவ்வொன்றாக நடக்கக் கூடிய நிலைமைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்” என்றார்.
Akurana Today All Tamil News in One Place