உலகம் முழுவதும் 97 இலட்சம் குழந்தைகள், மீண்டும் பாடசாலைக்கு செல்ல முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள் என லண்டனை தலைமையிடமாக கொண்டு ‘சேவ் தி சில்ட்ரன்‘ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக ஊரடங்கு நிலவுவதால், உலகம் முழுவதும் 1.6 பில்லியன் குழந்தைகள் பாடசாலைக்கு செல்லாமல் உள்ளனர். கொரோனா பிரச்சினையால் உலகம் முழுவதும் வறுமை அதிகரிக்கும். கல்விக்கு அரசுகள் ஒதுக்கும் தொகை குறையும்.
இதனால், ஊரடங்கு முடிந்த பிறகு குழந்தைகள் பாடசாலைக்கு திரும்ப செல்லாமல் இருக்கும் ஆபத்து, ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் அதிகமாக இருக்கும். மேலும், 28 நாடுகளில், இந்த ஆபத்து அதிகமாகவோ அல்லது மிதமாகவோ இருக்கும்.
மொத்தத்தில், உலகம் முழுவதும் 97 இலட்சம் குழந்தைகள், மீண்டும் பாடசாலைக்கு செல்ல முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள். இது, முன் எப்போதும் இல்லாத கல்வி நெருக்கடி நிலை.
அடுத்த 18 மாதங்களில், ஏழை நாடுகளில் கல்விக்கு செலவழிக்கும் தொகை குறையும். இப்படி பட்ஜெட் ஒதுக்கீட்டை குறைப்பதால், ஏழை-பணக்காரர் இடையிலான வேறுபாடு இன்னும் அதிகரிக்கும்.
பாடசாலைகள் மூடியுள்ள காலத்தில், பெண் குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு உள்ளாவது அதிகரிக்கும். குழந்தை திருமணங்கள், சிறுவயது கர்ப்பங்கள் ஆகியவையும் உயரும்.
கல்விக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை போக்க உலக நாடுகளும், நன்கொடையாளர்களும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். அத்துடன், ஏழை நாடுகள் கடனை திரும்பச் செலுத்துவதை நிறுத்தி வைக்க கடன் கொடுத்தவர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வீரகேசரி பத்திரிகை
Akurana Today All Tamil News in One Place