முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், முஸ்லிம்களுக்காக என்ன செய்தார்கள்? – A.L.M பாரிஸ் கேள்வி

நான் ஏழ்மையில் பிறந்து எளிமையில் வளர்ந்தவன். தற்பொழுது நான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூட, ஏழைகளின் வலியை உணர்ந்தவன். எனது வாழ்வில் இதனை ஒரு போதும் மறக்கவே முடியாது. இதனால்தான், பல கிராமங்களில் உள்ள அடிமட்ட மக்கள் மத்தியில் இருக்கும் வலி எனக்கு தற்பொழுதும் புரிகிறது.

அந்த வலி புரிந்த படியினால் தான், நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தேன். நான் பாராளுமன்றத்திற்குத் தெரிவானால் அதன் பின்பும், ஏழைகளுக்கான அப்பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வேன் என, பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

கண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்று முஸ்லிம் மக்களின் பிரதி நிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் முஸ்லிம்களுக்காக என்ன செய்தார்கள், எதனைச் செய்தார்கள்? என நான் அவர்களிடம் கேட்கின்றேன்.

அவர்கள் காலத்தை வீணடித்தார்களே தவிர, முஸ்லிம்களுக்காக எதனையும் செய்ததாகத் தெரியவில்லை. எனக்கு அரசியல் வாதிகள் மீதோ அல்லது கட்சிகள் மீதோ எவ்விதக் கோபங்களும் இல்லை. ஆனால், எமது ஏழை மக்களை ஏமாற்றுபவர்கள் மீதுதான் கோபமாக உள்ளது.

முஸ்லிம் மக்களின் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி மற்றும் அவர்களின் உரிமைகள் என்பவைகள் தான் எனது கொள்கை. எம்மால் எதனைப் பெற்றுக்கொள்ள முடியுமோ, அவற்றை அரசாங்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எம்மால் என்ன பெற வேண்டுமோ, அவற்றையும் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆக, இந்த இரண்டையும் பெற்றுக்கொள்வதற்கு நாம் பலம் வாய்ந்த அரசாங்கத்திற்கு எமது முழுமையான ஆதரவுகளை வழங்க முன்வர வேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரது தலைமையிலான அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஸ்தீரத்தன்மையின் மூலமே வளமான ஒரு நாட்டை நாம் அடைந்துகொள்ள முடியும். இதற்கான தகுதியும் வலிமையும் தற்போதைய ஜனாதிபதிக்கு உள்ளது என்றார்.

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter