ஜப்பானின் பிரதமர் ஷின்ஸோ அபேயின் விசுவாசமான உதவியாளரான அந்நாட்டு அமைச்சரவை தலைமைச் செயலாளர் யொஷிஹிடே சுகா, இன்று நடைபெற்ற அந்நாட்டு ஆளுங்கட்சி தலைமைத்துவப் போட்டியொன்றில் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் ஷின்ஸோ அபேயின் முக்கியமான பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகளைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்த யொஷிஹிடே சுகா, சாத்தியமான 535 வாக்குகளில் அளிக்கப்பட்ட 534 வாக்குகளில் 377 வாக்குகளை லிபரல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதன் 47 உள்ளூர் பிரிவுகளிடம் நடாத்தப்பட்ட தேர்தலில் பெற்றிருந்தார்.
அந்தவகையில், யொஷிஹிடே சுகாவின் போட்டியாளர்களான முன்னாள் பாதுகாப்பமைச்சர் ஷிகெரு இஷிபா 68 வாக்குகளையும், முன்னாள் வெளிநாட்டமைச்சர் புயுமியோ கிஷிடா 89 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற கீழ்ச்சபையில் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற நிலையில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பில் யொஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகவுள்ளது.
பிரதமர் ஷின்ஸோ அபேயின் கட்சித் தலைமை பதவிக்காலமான அடுத்தாண்டு செப்டெம்பர் மாதம் வரையில் கட்சித் தலைவராக யொஷிஹிடேற்ற் சுகா பணியாற்றவுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place