ஐக்கிய அரபு இராச்சியத்தில் வார இறுதி நாட்களில் மாற்றம்

ஐக்கிய அரபு இராச்சியம் தனது வாரத்தின் உத்தியோகபூர்வ வேலை நாட்களை நான்கரை நாட்களாகக் குறைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை வார இறுதி நாட்களாக மாற்றியுள்ளது.

வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் இந்த புதிய தேசிய வேலை வாரம் கட்டாயமாக்கப்படுவதோடு, இது முஸ்லிம்களின் ஜூம்மா தொழிகை நாளான வெள்ளிக்கிழமைகளில் முழு நாள் விடுமுறை என்ற பிராந்தியத்தின் வழக்கத்தை மீறுவதாக உள்ளது.

வளைகுடாவில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை வார இறுதி நாள் அல்லாத ஒரே நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் மாறவிருப்பதோடு அது அரபு அல்லாத உலக நாடுகளின் போக்குடன் இணையவுள்ளது.

புதிய கால அட்டவணைப்படி அரச துறையின் வார இறுதி வெள்ளிக்கிழமை நண்பகலுடன் ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையவுள்ளது. பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை ஆண்டு முழுவதும் பி.ப. 1.15க்கு இடம்பெறும்.

உலக சந்தைகளுடன் ஐக்கிய அரசு இராச்சியம் சிறந்த முறையில் இணையும் நோக்குடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரச செய்தி நிறுவனமான வாம் தெரிவித்துள்ளது. புதிய வேலை வாரம் உலகில் மிகக் குறுகியதாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தினகரன் – (2021-12-08 13:29:57)