விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் கைதி ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்படும் போது, விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுவது வழக்கம். குறித்த கைதி முஸ்லிமாக இருந்தால், அவர்களது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நிற்கச் சொல்லி, ஆசனவாயிலில் ஒரு ஊசியைச் செருகி, விளக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சி சோதனை செய்வர் என கவிஞர் அஹ்னாப் ஜஸீம் தனது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டாளரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்களில் ஒருவருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை பார்வையிடச் சென்ற உறவினர்களின் ஆடைகளை அகற்றுமாறு கோரி பொலிசார் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டு நீண்ட பதிவொன்றை தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளித்து வெளியிட்டுள்ள பதிவிலேயே கவிஞர் அஹ்னாப் ஜஸீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம், சுமார் 19 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடிவெள்ளி பத்திரிகை 15/9/2022 பக்கம் 01
Akurana Today All Tamil News in One Place