ஜெய்லானி பள்ளிவாசலை கொழும்பில் உள்ளவர்கள் நிர்வகிக்க இடமளிக்க முடியாது

கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து பள்ளிவாசலை நிர்வகிப்பவர்கள் கூரகலயில் இன நல்லிணக்கத்தை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை சிதைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். கொழும்பிலிருந்து வந்து நஞ்சு விதைகளை விதைக்கும் முயற்சிகளுக்கு நீங்கள் அகப்பட்டுக் கொள்ள வேண்டாமென கூரகல முஸ்லிம்களை வேண்டிக்கொள்கிறேன் என கூரகல நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்தார்.

கூரகலயில் கிரிக்கெட்போட்டியொன்றினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது ‘இப்பகுதி முஸ்லிம்களுடன் நாம் இருக்கிறோம்’. எங்கள் பன்சலை இருக்கிறது. கூரகலயில் முஸ்லிம்களின் வழிபாடுகளை நாம் இல்லாமற் செய்ய மாட்டோம். புதிதாக நாம் வழிபவதற்கு ஓர் இடம் ஏற்பாடு செய்து தருகிறோம். சிவனொளிபாதமலை போன்று கூரகலயை மாற்றவே நாம் விரும்புகின்றோம்.

சிவனொளிபாதமலை போன்று கூரகலயை உருவாக்குவதை விரும்பாத முஸ்லிம் அடிப்படைவாதிகள் கொழும்பில் குளிரூட்டிய அறைகளிலிருந்து கொண்டு எதிர்க்கிறார்கள். அவர்கள் உங்களை நெறிப்படுத்துகிறார்கள். இவர்களின் சூழ்ச்சிகளுக்கு கூரகல முஸ்லிம்கள் அடிமையாகிவிடாதீர்கள்.

அவர்கள் இப்பகுதி ஏழை முஸ்லிம்களுக்கு உதவுவதில்லை. இப்பகுதியை அபிவிருத்தி செய்வதில்லை. அதனால் கூரகல பள்ளிவாசல் நிர்வாகத்தை பலாங்கொடை முஸ்லிம்கள் கையேற்க வேண்டுமென நாம் கூறுகிறோம்.

ஏன் நீங்கள் உங்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தை 150 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள முஸ்லிம்களுக்கு நிர்வகிக்க இடமளித்துள்ளீர்கள்?

முஸ்லிம்களுடன் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. நாங்கள் முஸ்லிம்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகிறோம். கூரகல பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் பெளத்த இளைஞர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்காகவே கிரிக்கெட் போட்டியினை நாம் ஏற்பாடு செய்தோம்.
முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை நாம் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள வேண்டும்.கூரகல ரஜமகாவிகாரையின் காரணமாகவே இப்பகுதி வீதிக்கட்டமைப்பு உட்பட பல்வேறு அபிவிருத்திகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மோசமான கொள்கைகளைக் கொண்ட மக்கள் இக்கிராமத்திலும் இருக்கிறார்கள். நாம் அவர்களுக்குப் பயப்படப்போவதில்லை. சவாலாக எண்ணுவதுமில்லை. இங்கு எதிர்காலத்தில் கலாசார மத்திய நிலையம் தொழிற்பயிற்சி நிலையம் என்பன அமைக்கப்படும். தொழிற்பேட்டையொன்றும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பகுதி முஸ்லிம்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் ஒன்றைக் கூறவிரும்புகிறேன். உங்களது எதிர்காலம் கூரகல ரஜமகாவிகாரையிடமே உள்ளது. உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கூரகல ரஜமகாவிகாரையிடமே இருக்கிறது. முஸ்லிம்களின் பொருளாதார அபிவிருத்தி கூரகல விகாரை மூலமே ஏற்படவுள்ளது. உங்களது பயணம் எம்முடனே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2022-02-20

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter