கொரோனா வைரஸ் நெருக்கடியால் உலகளாவிய ரீதியில் 6கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 3ஆண்டுகளில் உலக பொருளாதாரம் எட்டிய சாதனைகளை அனைத்தையும் கொரோனா அழித்து விடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக உலக வங்கி தலைவர் மேலும் கூறுகையில், அடுத்த 15மாதங்களில் 160பில்லியன் டொலர்கள் செலவிடும் நோக்குடன் உலக வங்கி 100நாடுகளுக்கு ஏற்கனவே உதவி புரிந்து வருகிறது.
இந்த 100நாடுகளில் தான் உலகின் 70வீத மக்கள் வசித்து வருகின்றனர். உலக பொருளாதாரம் 5வீத சரிவு கண்டால் அது உலகின் ஏழை நாடுகள் மீது சொல்லொணா தாக்கத்தை செலுத்தும்.
பொருளாதார சரிவால் சுமார் 6கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசி, பட்டினி, வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று கணித்துள்ளோம். ஏழைநாடுகளின் சிதைந்த சுகாதார அமைப்புகளை மீட்க உலக வங்கி இதுவரை 5.5பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.
எனவே வளர்ந்த நாடுகள் இப்போதும் முன்வர வேண்டும். அப்போது தான் 6கோடி மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்க முடியும் என தெரிவித்துள்ளார்.
Akurana Today All Tamil News in One Place
