இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இறுக்கமும் நெருக்கமுமிக்க நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றோம். எனவே சதி திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் செயற்பட வேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
அக்குறணை பிரதேச சுகாதார மருத்துவ பிரிவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அக்குறணை பிரதேசத்தில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் இப்பிரதேச சுகாதார நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் பேசியிருந்தேன். இதன்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றமை சுட்டிக்காட்டப்பட்டது. தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும் என வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன், தற்போது முஸ்லிம் மக்கள் மீது கூடுதலான நெருக்குவாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. ஜனாஸா விடயத்தில் மக்கள் மிகவும் நொந்துபோயுள்ள நிலையில் மாவனெல்லை சிலை உடைப்பு விவகாரம் உள்ளிட்ட பல சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவ்விடயங்களை வைத்து நாட்டில் பாரியதொரு அபாய நிலைமை ஏற்படுத்தப்பட்டுவிடுமா என்று அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், நாம் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு செயற்படுவதை தவிர்த்துகொள்ள வேண்டும். சகல விடயங்களையும் அறிவு ரீதியாக சிந்தித்து செயற்படுவது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறேன்.
ஜனாஸா கட்டாயம் எரிக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இந்நிலையில் அதனை எதிர்த்து ஜனாஸாக்கள் எரிக்கப்படக் கூடாது என ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன. அதற்கான அழைப்பும் விடுக்கப்படுகின்றன. இவ்வார்ப்பாட்டங்களை யார் நடத்துகின்றனர் என்பதை நாம் தேடிப்பார்க்க வேண்டும். அதன் பிற்பாடே அழைப்புகளுக்கு செவிசாய்க்க வேண்டும். முஸ்லிம்களை கொதிப்படையச் செய்ய இனவாதிகள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகிவிட்டனர் என்பதை உணர முடிகிறது. வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு செயற்பட்டால் பாரிய விபரீதங்களுக்கு முகம்கொடுக்க நேரிடும். எனவே, எமது இருப்பு மற்றும் நாட்டின் இன்றைய நிலைமைகளை கருத்திற்கொண்டும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Akurana Today All Tamil News in One Place