நல்லாட்சியில் ஏற்பட்ட பிளவுகளே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமென கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் சஹ்ரான் போன்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை வழிநடத்தும் குழு நாட்டிற்கு வெளியில் உள்ளது எனபதே எனது நிலைப்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று -25- சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரினதும் கடப்பாடாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பேரழிவை கணக்கிட இயலாது.

இதனையிட்டு கவலையடைவதுடன் எனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு மிக கொடூரமான தாக்குதல் இடம்பெற்றதையிட்டு அன்றுபோல் இன்றும் மனம்வருந்துகின்றேன்.

இன்று 8 ஆவது தடவையாகவும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வந்துள்ளேன். இதனையிட்டு மகிழ்ச்சியும் அடைகின்றேன். எதிர்காலத்தில் இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்று விட கூடாது என்பதில் நாம் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். 

எனது ஆட்சியில் நான் வழங்கிய ஜனநாயக சுதந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்தினர். இதனால் அடிப்படைவாத சக்திகள் தலைத்தூக்கி பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புப்பட்டது. இது ஒரே தடவையில் இடம்பெற்றதொன்றல்ல.

சிங்களம் – முஸ்லிம் மோதல்கள் இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 1930களிலும் சிங்களம் – முஸ்லிம் மோதல் இடம்பெற்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனைவரும் இலங்கையர்களாக செயற்பட்டு தீர்வு காண முற்பட வேண்டும். 

நல்லாட்சியில் ஏற்பட்ட பிளவுகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமென கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் சஹ்ரான் போன்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை வழிநடத்தும் நாட்டிற்கு வெளியில் உள்ளனர் என்பதே எனது நிலைப்பாடாகும் என தெரிவித்தார்.