இறைவனுக்கு பயந்து தான் எங்களுடைய ஆட்சி, ஆட்சியாளர்களுக்கு அல்ல – நசீர் அஹமட் SLMC

நாங்கள் மரணத்துக்கு எப்போதும் அஞ்சியவர்கள் அல்ல. இறைவனுக்கு பயந்து தான் எங்களுடைய ஆட்சி இருக்குமே தவிர எந்தவொரு ஆட்சியாளர்களுக்கும் பயந்து முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் போது எங்களுடைய வாய்கள் மூடி இருக்காது. எங்களுடைய அத்தனை குரல்களும் ஓங்கி ஒலிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கல்குடாப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பிரகாரம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்த நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடியோடு அழித்தொழிக்கப்பட்டு, ஐக்கிய தேசிய கட்சி அடியோடு இல்லாமல் செய்யப்பட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துக் கொண்டுள்ளது

இந்த நிலையில் எதிர்கட்சி மிகவும் பலவீனமாக உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் பலவீனமடைந்த நிலையில் உள்ள வேளையிலே எதிர்கட்சியின் குரல் இல்லாமல் இந்த அரசாங்கத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும் வேளையில் நாங்கள் சிறுபான்மை சமூகத்தினுடைய வேறு பிரதிநிதித்துவத்தில் பல சவால்களுக்கு முன்னோக்கி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இவற்றையெல்லாம் முறையடித்து சாணக்கியமாக காய் நகர்த்தி இந்த அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டான அரசியலை எவ்வாறு செய்ய முடியும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கின்றோம். ஏனெனில் இந்த நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் ஒரு அரசாங்கத்தினை தெரிவு செய்துள்ளார்கள்.

 எனவே இவர்களுடனான இணக்கப்பாட்டான அரசியல் எவ்வாறு செய்ய முடியும் என்பதை பற்றியதாகவே தான் எங்களுடைய அரசியல் நகர்வுகள் இருக்கும். முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கும், அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும், அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் நாங்கள் சாணக்கியமான காய் நகர்த்தல்களை நிச்சயமாக செய்வோம்.

அவ்வாறு செய்து முஸ்லிம்களுடைய உரிமைகளுக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற எச்தவொரு பிரேரனைக்கும் நாங்கள் ஒருபோதும் அதற்கு கை உயர்த்தப்போவதுமில்லை. ஆதரவு வழங்கப்போவதுமில்லை. அதற்கு எதிராக குரல் கொடுக்கின்ற முதலாவது குரலாக எனது குரல் இருக்கும். 

நாங்கள் மரணத்துக்கு எப்போதும் அஞ்சியவர்கள் அல்ல. இறைவனுக்கு பயந்து தான் எங்களுடைய ஆட்சி இருக்குமே தவிர எந்தவொரு ஆட்சியாளர்களுக்கும் பயந்து முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் போது எங்களுடைய வாய்கள் மூடி இருக்காது. எங்களுடைய அத்தனை குரல்களும் ஓங்கி ஒலிக்கும். அதனை செய்யும் பொறுப்பை சுமந்தவனாக நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்து எதுவித எதிர்பார்ப்பும் இன்றி பல அர்ப்பணிப்புக்களை செய்து என்னை இந்த நிலைக்கு உயர்த்திய ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். 

அரசியல் வேறுபாடுகளை நாங்கள் முடிவுக்கு கொண்டு வந்து எங்களுடைய அரசியல் கலாசாரம் இதற்கு மாறுபட்ட கலாசாரமாக, ஒற்றுமையாக குடும்பமாக நாங்கள் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் இறங்கி வென்றெடுப்பதற்கு நாங்கள் தயாராகுவோம் என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page