முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசியை 4.2 மில்லியன் பேருக்கு பெற்றுக்கொள்ள முடியும் – பவித்ரா

உலக சுகாதார ஸ்தாபனம் பரிசோதித்துவரும் தடுப்பூசியை விநியோகிக்கும்போது ஆரம்பகட்டமாக எமது நாட்டில் 4.2 மில்லியன் பேருக்கு அதனை பெற்றுக்கொள்ள முடியும். என்றாலும் எப்போது அதனை விநியோகிக்கும் என்று தெரியாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால், கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இருக்கும் வைத்தியசாலைகளில்  34 பி.சி.ஆர் இயந்திரங்களும்  ஆயிரத்தி 20 வெண்டிலேட்டர்களும் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கான 704 கட்டில்கள் இருந்துள்ளன.

கொவிட் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் 25 பி.சி.ஆர். இயந்திரங்களும் 220 நடமாடும் வெண்டிலேட்டர்களும் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 61 கட்டில்களும் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. 

பி.சி.ஆர்.பரிசோதனைக்காக நாட்டுக்குள் இதுவரை 25 மத்திய நிலையங்கள் இயங்குவதுடன் 34 இயந்திரங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

இந்த எண்ணிக்கையை அதிகரிக்க உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிதி நிறுவனங்களால் நிதி ஒதுக்கிக்கொண்டு அரச வைத்தியசாலைகளில் புதிதாக பி.சி.ஆர். பரிசோதனை மையங்களை அமைக்க இருக்கின்றோம்.

அத்துடன் தற்போது அரச வைத்தியசாலைகளில் நாளொன்றுக்கு 11ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஒரு பி.சி.ஆர். பரிசோதனைக்காக 6 மணி நேரம் செல்லும்.

இதனை மேலும் விரைவாக மேற்கொள்ள தேவையான இந்திரங்களை இனம்கண்டுள்ளதுடன்  ஆளணிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதேபோன்று தொற்றாளர்கள் குணமடைந்து செல்லும்போதும் வைத்தியர்களின் ஆலாேசனையின் பிரகாரம் அவர்களுக்கு ரெபிட் எண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மேலும் கொவிட் தொற்றுக்கான தடுப்பூசி ஒன்றை உலக சுகாதார ஸ்தாபனம் பரிசோதனை செய்ய ஆரம்பித்த காலப்பகுதியிலே அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தொற்று நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்டுவந்தது.

அதன் பிரகாரம் குறித்த தடுப்பூசி பரிசோதனை செய்து பார்த்த பின்னர் அதனை விநியோகிக்கும்போது, எமது நாட்டின் சன்தொகையில் 20 வீதமானவர்களுக்கு அதாவது 4.2 மில்லியன் பேருக்கு அந்த தடுப்பூசியை முதல் கட்டமாக பெற்றுக்கொள்ள முடியும்.

என்றாலும் கொவிட் தொடர்பான குறித்த தடுப்பூசியை பரிசோதித்து பார்க்கும் மூன்றாவது கட்டத்திலே இருக்கின்றது. அதனால் அந்த தடுப்பூசி எப்போது விநியாேகிக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது.

விநியோகிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு முன்கூட்டியே தயாராகி இருக்கின்றது. கொவிட் தொடர்பான தடுப்பூசி தொடர்பில் நாங்கள் தொழிநுட்ப குழுவொன்றை அமைத்திருக்கின்றோம். அதற்கு உதவியாக மேலும் 3 உப குழுக்களை அமைத்திருக்கின்றோம். தடுப்பூசி கிடைத்ததுடன் அதனை வெற்றிகரமாக மேற்கொள்ள சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருக்கின்றோம்.

அத்துடன்  கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதிவரையான காலத்தில் சமூகத்தில் இருந்து கொவிட் நோயாளர்கள் யாரும் இனம் காணப்படவில்லை, அந்த காலப்பகுதியில் அதிகளவான பி.சி.ஆர். பிரசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page