சஜித் எமது கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளார்- H.M.M ஹரீஸ்

கடந்த பாராளுமன்றத்தில் எமது கட்சியுடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மீறி சஜித் பிரேமதாச துரோகம் செய்துள்ளார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (14) மாலை சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.

கல்முனை தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒரேயொரு வேட்பாளராக என்னை மட்டும் நிறுத்தி கல்முனையின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைமை பகிரங்கமாக கல்முனையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெரிவித்து இருந்தும் கல்முனை தொகுதியில் என்னை தோல்வியடைய செய்ய வேண்டும் என பலரும் திட்டங்களை தீட்டியிருந்தனர்.

இதில் முன்னணியாக நின்றவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமில் என்பவராவார்.

மேலும் இத்தேர்தலில் எமது கட்சியுடன் உடன்படிக்கை ஒன்றினை மேற்கொண்டு தேசிய பட்டியல் ஒன்றினை பெற்று தருவதாக கூறிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தேசிய பட்டியலை கட்சிக்கு தராமல் துரோகம் இழைத்துள்ளார்.

எனவே இவரது செயற்பாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். எதிர்வரும் தேர்தலில் எமது திட்டமிடல்கள் யாவும் அனுபவங்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும். கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எனக்கும் எமது கட்சிக்கும் வாக்களித்த சகல மக்களுக்கும் நான் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என கூறினார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் , மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோசம் அக்தார், ஏ.சி.ஏ சத்தார், எம்.எஸ்.எம் நிசார், எம்.நவாஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஸ், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.நிசார்த்தீன், மாளிகைக்காடு கட்சியின் முக்கியஸ்தகர் எம்.எச் நாசர் ,கல்முனை முன்னாள் மாநகர சபை வேட்பாளர் தேசமாணிய ஏ.பி.ஜெளபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page