நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை பேணாவிடில் 7 வருட சிறைத் தண்டனை: பொலிஸ்

மேல்மாகாணத்திற்குள் திறக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடுப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தகவல் திரட்டும் நடவடிக்கைகளின் போது எவரேனும் பொய்யான தகவல்களை வழங்கினால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுடன், அத்தகைய நபர்களை 7 வருடங்கள் வரை சிறை வைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

மேல்மாகாணத்தின் சில பகுதிகளில் நாளையுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த பகுதிகளில் காணப்படும் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க முன்னர்,சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும். இந்நிலையில் இவ்வாறு திறக்கப்படவுள்ள இத்தகைய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இடையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் அளவில் குறைந்தளவான  ஊழியர்களையே பணியில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.

இதேவேளை, ஊழியர்கள் தங்களது கைகளை கழுவுவதற்கு அல்லது  கைகளை சுத்தம் செய்துக் கொள்வதற்காக உரிய வசதிகளை செய்திருக்க வேண்டும். அவர்களது உடல் வெப்பத்தை அளவிடுவதற்கும் வசதிகள் செய்திருக்க வேண்டும். இதன்போது அனைவருமே முகக்கவசம் அணிவதும் கட்டாயமாகும்.

அதேவேளை இவ்வாறு திறக்கப்படும் நிறுவனங்களிடமிருந்து சேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் வருகைத்தரும் நபர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வைப்பதற்கும் நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கமைய இவ்வாறு சேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் வருபவர்கள், நிறுவனங்களின் இத்தகைய செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவதுடன், தங்கள் தொடர்பில் உண்மையா தகவல்களை மாத்திரமே அங்கு குறிப்பிட வேண்டும். மாறாக எவரேனும் ஒருவர் பொய்யான விபரங்களை வழங்கியிருந்தால், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல்  சட்ட விதிகள் மற்றும் தண்டனை சட்ட கோவைக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்படும் சந்தேக நபரை 7 வருடங்கள் வரை சிறை வைக்கவும் முடியும்.