முக்கிய தகவல்களை வெளியிடத் தயாராகும் மைத்திரி, ரணில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சில முக்கிய விடயங்களை வெளியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 5 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார். இதனையடுத்து முன்னாள் பிரதமர் எதிர்வரும் 6 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்த சில பிரதான அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு கட்டாயம் பதிலளிக்க போவதாகவும் அத்துடன் மேலும் பல விடயங்களை வெளியிட உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

அதேவேளை ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலருடன் கலந்துரையாடியுள்ளார்.

“எதிர்வரும் 6 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான் செல்வேன். அங்கு பல விடயங்கள் வெளியாகும் ” என முன்னாள் பிரதமர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டதுடன் அது ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதிகாரிகள் சிலர் வழங்கிய சாட்சியங்கள் மூலம் உறுதியானது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page