நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்பு

நாடளாவிய ரீதியில் அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடொன்றை வாங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கும் வகையிலான புதிய வீடமைப்புத்திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு, அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறாக வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கடந்த மே மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் நடுத்தர வருமானம் பெறுவோரால் கொள்வனவு செய்யக்கூடியவாறான 5,000 வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பொதுமக்கள் 30 வருட மீளச்செலுத்துகை காலத்தின் அடிப்படையில் 6.25 வட்டி வீதத்தில் அரச வங்கிகளில் கடன்பெற்று அதனூடாகக் கொள்வனவு செய்யமுடியும். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீடுகள் நாடளாவிய ரீதியில் கொழும்பு, கண்டி, அநுராதபுரம், பேலியகொட, கொட்டாவ, பன்னிப்பிட்டி மற்றும் மாலபே ஆகிய நகரங்களில் அமைக்கப்படவுள்ளன.

வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு விரும்புவோர் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 011-2875907 அல்லது 077-7269740 அல்லது 071-5335357 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தொடர்புகொண்டு இது குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஆரம்ப மூலதனத்தைத் திரட்டிக் கொள்வதற்கான 5 வருடகாலத்திற்கு செல்லுபடியாகக் கூடியவாறாக 25 பில்லியன் ரூபா நிதியைக் கடனாக வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு முன்வைக்கப்பட்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கோரிக்கைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page