இறுதியாக உயிரிழந்த மூவருக்கும் கொரோனா இருந்தது உண்மையா? ஒன்றுமே தெரியாது என்கிறார் பவித்ரா

கொவிட் -19 விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வேளையில், எதிர்க்கட்சி உறுப்பினர் அசோகா அபேசிங்க ஒழுங்குப்பிரச்சினையில் கேள்வி ஒன்றினை எழுப்பினார்.

“இலங்கையில் பதிவாகிய இறுதி மூன்று மரணங்களும், மரணம் இடம்பெற்ற பின்னரே அவர்கள்  கொரோனா வைரஸ் தொற்றுள்ள நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே வீடுகளில் உள்ளவர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் பரவல் உள்ளது என்பது இதன் மூலமாக வெளிப்படுகின்றது அல்லவா? “என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி :- அவ்வாறு இடம்பெறவில்லை. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட, அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை வீடுகளில் சுய தனிமையில் வைத்திருக்கும் வேளைகளில் அவர்களுக்கு பி.சி.ஆர் எடுத்துப்பார்த்ததில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அது தவிர்ந்து வேறு எவருக்கும் தொற்று இருப்பதாக இதில் உறுதியாகவில்லை என்றார்.

இந்நிலையில் மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அசோகா அபேசிங்க எம்.பி கூறுகையில்:- இறுதியாக உயிரிழந்துள்ள மூன்று நபர்களும் இறந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அதிலும் இறுதி இரண்டு நபர்கள் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவும் இல்லை, சாதாரண சிகிச்சை பிரிவில் இருந்தவர்களே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்

சுகாதார அமைச்சர் :- இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, சுகாதார பணிப்பாளர் இது குறித்து எனக்கு எதுவுமே அறிவிக்கவில்லை, அதுமட்டுமல்ல இதையெல்லாம் தேடிக்கொண்டு இருக்க எனக்கு நேரமும் இல்லை. பாராளுமன்றத்திற்கு வந்த பின்னரே இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே தேடிப்பார்த்து கூறுகின்றேன் என்றார். -வீரகேசரி பத்திரிகை