க.பொ.த. சாதாரணதர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா ? இல்லையா? என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தெடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பிரச்சினைகள் உண்டு. இதேபோன்று தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை 2 வார காலத்துக்குள் மேற்கொள்வோம்.

பின்னர் தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்களை ஆரம்பிக்க முடியாதாயின், மீண்டும் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும்.

அதன் அடிப்படையில் கல்வி பொது தராதர  சாதாரணதர பரீட்சையை இந்த பாடசாலைகளில் நடத்த முடியுமா? என்ற தீர்மானம் 2 வார காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும். இதன் அடிப்படையில் க.பொ.த சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்தும் அதாவது, பரீட்சையை நடத்துவது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி குறிப்பிட்ட திகதிகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் சாதாரணத்தரப் பரீட்சைகளையும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் பாடசாலைகளை திறப்பதில் சவால்கள் காணப்படுவதால் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் திட்டமிட்டபடி பரீட்சைகள் இடம்பெறுமா என்பது கேள்விக்குரியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.