“கொரோனா” தொடரும் அச்சம் – அதிகரிக்கும் மரணம், மருந்து, புதிய வைரஸ்

மக்கள் மத்தியில் தற்போது கொரோனா தொடர்பான பீதி அதிகரித்துள்ளது. அன்றாடம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதே இதற்கு காரணம். 

இதுவரை மேல் மாகாணம் பாதுகாப்பான பிரதேசமாக இருந்த போதும், தற்பொழுது அது பாதுகாப்பற்ற பிரதேசமாக  மாறிவருகின்றது.

கொரோனாவின் முதலாவது அலையின் போது 9 மரணங்கள் பதிவாகியிருந்தன. 

எனினும், தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலையில் அன்றாடம் மரணிப்போர் மூவர், நால்வர் என அதிகரித்துச் செல்வதையே காணமுடிகின்றது.

இதுவரை நாட்டில் மொத்தமாக 74 பேர் நோய்த்தொற்று காரணமாக மரணித்துள்ளனர்.  

இதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது அந்த நம்பிக்கையும் தகர்ந்து வருவதையே காணமுடிகின்றது.

உலக சுகாதார நிறுவனம் ரெம்டெஸிவர் என்ற தடுப்பு மருந்துக்கு தடை விதித்துள்ளது. 

குறித்த நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பு மருந்து உலகில் புகழ் பெற்று வந்த நிலையில் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதல்ல என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தற்பொழுது கூறுகின்றது.

இந்த நிலையில், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் இரட்டிப்பாகி உள்ளது. 

சரியான மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும் என மக்கள் மிகுந்த ஏக்கத்துடன் காணப்படுகின்றனர்.  

அது மாத்திரமன்றி தடுப்பு மருந்துகள் ஒரு வருடத்துக்கு மாத்திரமே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும் என்றும் இதனால் நிரந்தர தீர்வு கிட்டாது என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வாறு உலக சுகாதார நிறுவனத்தின் புதிய புதிய அறிவிப்புகள் மக்களை மேலும் அச்சம் கொள்ள செய்துள்ளன.

இதேவேளை, அமெரிக்காவில் சப்பாரே வைரஸ்  எனும் நோய் பரவி வருகிறது.

எனவே, அரசாங்கம் இதுதொடர்பாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மத்திய நிலையத்துடன் தொடர்புகொண்டு, அறிந்து கொள்ள வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உலகளாவிய ரீதியில் கொரோனோ வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் இபோலா வைரஸுக்கு சமமாக புதிய வைரஸ் ஒன்று உருவாகி இருக்கின்றது. இந்த வைரஸு சபாரே வைரஸ் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக, அரசாங்கம் தெரிந்திருக்க வேண்டும். 

கொரோனா தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் ஏற்படும் புதிய வைரஸ் தொற்றுக்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு செயற்படும் என நினைத்தும் பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த நிலையில் அரசு மக்கள் மத்தியில் தோன்றியுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page