பஸ் கட்டணங்களை அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டாது – அமைச்சர் 

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டாலும் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துதுறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குணகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த சந்தர்ப்பத்திலும் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இடமளிக்கும் நிலைமை தற்போது இல்லை. பஸ் உரிமையாளர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவர்களது வருமானம் குறைவடைந்துள்ளமை பற்றி நாம் கலந்துரையாடியுள்ளோம். 

அவர்களுக்கு வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எவ்வாறிருப்பினும் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

பஸ்களில் பயணிப்போருக்கும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் இயன்றவற்றை நாம் நிறைவேற்றியிருக்கின்றோம். அவர்களிடம் நாம் நிலைவரம் பற்றி தெளிவுபடுத்தியிருக்கின்றோம். 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் அனைத்தும் பொது மக்களின் பிரயாணத்திற்காக தயார் நிலையில் உள்ளன.

ஆசனங்களுக்கு போதுமானளவு பிரயாணிகளை பஸ்களில் அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக அலுவலக நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனினும் வழமையாக சாதாரண நேரங்களில் பிரயாணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கூட தற்போது இல்லை. சுகாதாரத்துறைக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page