இலங்கை பௌத்த நாடு, எங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும்!

இலங்கை ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஒரு சட்டமும் நிர்வாகமும் காணப்பட வேண்டும். ஆகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யும் கொள்கை தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் பிறிதொரு தரப்பினரால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு அமைவாகத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்ய வேண்டாம் என்றும் அவற்றை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தற்போது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய அரசாங்கம் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கையின் அடிப்படையிலேயே ஆட்சியைப் பொறுப் பேற்றுக்கொண்டது.

இது இவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களைப் புதைப்பதால் அதிலிருந்தது மேலும் வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே சடலங்களை உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தமது மத நம்பிக்கைக்கு முற்றிலும் முரணானது என்று முஸ்லிம் சமூகத்தினர் கூறுகின்றார்கள்.

ஆனால் இது ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஒரு சட்டமும் நிர்வாகமும் காணப்படவேண்டும். எம்மால் அராபிய நாடு ஒன்றுக்கு புத்தரின் சிலையை எடுத்துச் செல்லவோ, அதை அங்கு நிர்மாணிக்கவோ முடியாது.

எம்மாலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆனால் நாம் அதனைச் செய்யமாட்டோம். ஆகவே இவ்விவகாரத்தில் அநாவசியமான சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று இஸ்லாமிய மதத்தலைவர்களை வலியுறுத்துகிறோம் என்றார்.

தற்போது குரல் எழுப்புகின்ற ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட எந்தவொரு முஸ்லிம் தலைவருமே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை. எனவே அவர்கள் இவ்வாறு போராடுவார்களெனின், நாங்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கே தயாராக இருக்கின்றோம். நாங்கள் பௌத்த தர்மத்திற்கு ஏற்றவாறு அமைதியான முறையில் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page