ஒரே நாடு, ஒரே சட்டம் (முஸ்லீம் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான முயற்சியா?)

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயம் தற்போது சமூகத்தில் பேசு பொருளாய் உள்ளது. இது தொடர்பில் மிகவூம் ஆழமான ஆய்வூகளும், கருத்துரைகளும் முன்வைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆயினும், இந்த விடயம் தொடர்பான சில ஆரம்ப தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

2020.08.20ம் திகதி பாராளுமன்றத்தில் தனது சிம்மாசன உரையின் மூலம் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் முன்வைத்துள்ளார்கள். குறித்த கொள்கைப் பிரகடன உரையின் அடிப்படை தொனிப்பொருளாக “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது முன்வைக்கப்பட்டுள்ளது.  

“ஒரே நாடு?”

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு என்பது  தற்போது ஒரே நாடாகவே இருக்கிறது. இது ஒற்றையாட்சித் தன்மையூடையது. இலங்கைத் தமிழர்கள் தமக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்றும் தாம் தனியான நாடாக பிரிந்து செல்ல வேண்டும் எனவூம் போராட்டங்களை நடாத்தினர். ஆயூதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதிகார பகிர்வூ, சமஷ்டி என்பன கோரப்படுகின்றன. இந்நிலையில் இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வூ சாத்தியமில்லை என்பதனை மறைமுகமாக சுட்டுவதே ஒரே நாடு என்ற பதப்பிரயோகத்தின் பொருளாக அமைய முடியூம். 

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மற்றுமொரு இடத்தில் பெரும்பான்மையினரின் விருப்பை நிறைவேற்றுவது தான் தனது அரசாங்கத்தின் கடமையாகும் என குறிப்பிடுகிறார். அரசொன்றின் கடமை என்பது பெரும்பான்மையினரின் விருப்பை மாத்திரம் நிறைவேற்றுவதாக இருக்க முடியாது. இருக்கவம் கூடாது. பல்லின சமூகம் வாழ்கின்ற இலங்கையில் பெரும்பாண்மையினரின் விருப்பு என்பதற்கும் அப்பால் நீதி, சமத்துவம், ஒப்புரவ, என்பனவற்றின் அடிப்படையிலான நீதியானதும் சுதந்திரமானதுமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாகவே இருக்க வேண்டும். 

“ஒரே சட்டம்?” 

இலங்கையில் அரசியலமைப்புச் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஒன்றுதான் உள்ளது. இலங்கையின் குற்றவியல் சட்டம் ஒரே ஒரு சட்டம் தான் நடைமுறையில் உள்ளது. கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சட்டம், வங்கி தொடர்பான சட்டங்கள், காடு பேணல் சட்டம், கரையோரம் பேணல் சட்டம், சுற்றாடல் சட்டம், போக்குவரத்துச் சட்டம், தொல்பொருள் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் சட்டங்கள், தாபன விதிக்கோவை என நாட்டின் எல்லாச் சட்டங்களும் எல்லா சமூகங்களுக்கும் பொதுவான ஒரே சட்டங்களாகவே காணப்படுகின்றன. 

ஆனாலும் திருமணம், விவாகரத்து, சொத்துப்பங்கீடு ஆகிய விடயப்பரப்புகள் மாத்திரம் வெவ்வேறு சட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வட மாகாணத்து தழிழர்கள் தேசவழமை சட்டத்தினாலும், மத்திய மாகான சிங்களவர்கள் கண்டியச் சட்டத்தினாலும் ஏனைய மாகாண சிங்களவர்கள் ரோம டச்சுச் சட்டத்தினாலும், முஸ்லிம்கள் முஸ்லிம் சட்டத்தினாலும் ஆளப்பட்டு வருகின்றனர். 

திருமணம், திருமண வயது, திருமண நடைமுறை விவாகரத்துக்கான காரணங்கள் விவாகரத்திற்கான நடைமுறை சொத்துப் பங்கீடு செய்யப்படுகின்ற விதம் என்பன தேசவழமை சட்டம், கண்டியச் சட்டம், ரோம டச்சுச் சட்டம், முஸ்லிம் சட்டம் என்பவற்றில் வெவ்வேறு நடைமுறைகளை கொண்டுள்ளன. இவற்றினால் தேசிய ஒருமைப்பாடு தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு என்பவற்றிற்கு எந்தவிதமான சவால்களோ அச்சுறுத்தல்களோ கிடையாது. ஆயினும், பெரும்பான்மையினர் விரும்புகின்றவாறு சிறுபான்மையினர் வாழவேண்டும் என வற்புறுத்துகின்ற விதமாக மேற்சொன்ன வேறுபாடுகள் இல்லாது எல்லோரும் ஒரே விதமாக திருமணம் செய்ய வேண்டும், யாரும் யாரையம் திருமணம் செய்யலாம், திருமண வயதில் வித்தியாசம் இருக்க கூடாது, திருமணப் பதிவ ஒன்றாக இருக்க வேண்டும், விவாகரத்து நடைமுறையில் வித்தியாசம் இருக்கக் கூடாது, சொத்துப் பங்கீட்டில் வித்தியாசம் இருக்க கூடாது என கூறுவதே ஒரே சட்டம் எனக்கூறுவதன் பொருளாகும். 

ஆகவே, ஒரே சட்டம் என்பது தேசவழமைச் சட்டம்,கண்டியச் சட்டம், ரோம டச்சுச் சட்டம், முஸ்லீம் சட்டம் போன்ற சட்ட நடைமுறைகளை இல்லாதொழிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் –

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page