ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா – மேலும் அதிகரிக்க வாய்ப்பு

இலங்கையில் இன்று (10) இதுவரையில் மாத்திரம் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினமே இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த உதவியாளர்கள் மூவர் உட்பட 286 பேர் உள்ளடங்குவதாகவும் மற்றுமொருவர் வெலிகட சிறைச்சாலை கைது ஒருவர் எனவும் ஏனையவர்களில் 9 பேர் இந்தியாவில் இருந்தும், 3 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் மற்றுமொருவர் பாகிஸ்தானில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 342 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 300 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 463 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதிய அளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 472 பேர் இருப்பதுடன் 204 அதிகாரிகள் சேவை செய்வதாகவும் புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கான பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அங்கு சேவையாற்றிய 90 பேர் விடுமுறைகளுக்காக தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடுகெலியாவ தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றிய ஆலோசகரின் தந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என புத்தளம் மாவட்ட சுகாதார பரிசோதகர் வைத்தியர் தினூஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Ada Derana

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page