தூர பிரதேசங்களுக்கான பஸ், ரயில் சேவைகள் விபரம்

தூர பிரதேசங்களுக்கான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் குறித்த பேருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.-

அத்துடன், அதிவேக வீதிகளின் உள்வரும் மற்றும் வெளியேறும் பகுதிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அதிவேக வீதியின் உள்வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அலுவலக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் குறித்த ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதான ரயில் மார்க்கத்தின் தெமட்டகொட, வனவாசல, எந்தெரமுல்ல, ஹொரபே, வல்பொல, பட்டுவத்த ஆகிய உப ரயில் நிலையங்களிலும், களனி மற்றும் ராகம ஆகிய பிரதான ரயில் நிலையங்களிலும் இவ்வாறு ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, புத்தளம் ரயில் மார்க்கத்தின், ஜா – எல, நீர்கொழும்பு, குரண ஆகிய பிரதான ரயில் நிலையங்களிலும், பேரலந்த, துடெல்ல, குடாஹக்கபொல, கட்டுவ ஆகிய உப ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கரையோர ரயில் மார்க்கத்தின் பாணதுறை பிரதான ரயில் நிலையம் மற்றும் பின்வத்த உப ரயில் நிலையத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது.

மேலும், களனி ரயில் மார்க்கத்தின் பேஸ்லைன் ரயில் நிலையத்திலும், கொட்டாவீதி உப ரயில் நிலையத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது

இதேவேளை, வடக்கு ரயில் மார்க்கத்தின், குருணாகலை பிரதான ரயில் நிலையம் மற்றும் முத்தெட்டுக்கல உப ரயில் நிலையத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சுகாதார விதிமுறைகளுக்கமைய 136 அலுவலக ரயில்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி பிரதான ரயில் மார்க்கத்தில் 46 ரயில்களும் கரையோர மார்க்கத்தில் 54 ரயில்களும் புத்தளம் மார்க்கத்தில் ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அத்தியட்சகர் பத்மலால் தெரிவித்துள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page