நீங்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள இருதய வைத்திய நிபுணர் லக்ஸ்மனின் விடுதிக்கு சென்றிருந்தால் அங்கு தொங்க விடப்பட்டிருக்கும் படச்சட்டம் ஒன்றைக் கண்டிருக்கலாம். அதிலுள்ள வசனங்களை வாசித்துமிருக்கலாம். ஒருவேளை இருதய நோய் பற்றிய பயத்தினால் வாசிக்காமலும் விட்டிருக்கலாம்.

அந்தச் சட்டம் ஆங்கிலத்தில் ஆறு சொற்களைக் கொண்டமிக முக்கியமான சொற்றொடர், சந்து சொற்களைக் கொண்ட மிகமுக்கியமான சொற்றொடர், நான்கு சொற்களைக் கொண்ட மிக முக்கியமான சொற்றொடர் என்பவற்றைத் தொடர்ந்து தெரிவித்து இறுதியாக மிகவும் முக்கியத்துவம் குறைந்த சொல் எது என்பதைத் தெரிவிக்கிறது.

ஆங்கிலத்தில் ஆறு சொற்களைக் கொண்டமிகமுக்கியமான சொற்றொடர் I admit made a mistake என்பதாகும். அதாவது ‘நான் செய்தது பிழை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்’ என்பதாரும்.

மற்றவர்கள் பிழைவிடும் போது அவர்கள் இதனைக் கூறவேண்டும் என்று எதிர்பார்ப்போம். நாங்கள் பிழை விடும் போது இதனைச் சொல்ல மாட்டோம். அதற்குப் பதிலாக அறுபது பேர்களைச் சந்தித்து ஆறு மணித்தியாலங்களுக்கு விளக்கமளிப்போம். ஆனால் நீங்கள் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்த மறந்து விடாதீர்கள்.

ஐந்து சொற்களைக் கொண்ட மிக முக்கியமான சொற்றொடர் You did a good job என்பதாகும். அதாவது ஒருவர் செய்தவேலை ஓரளவுக்காவது திருப்திகரமானதாக இருந்தால் ‘நீங்கள் செய்ததுமிகவும் நன்றாக இருந்தது’ என்று கூற வேண்டும்.

நான்கு சொற்களைக் கொண்ட மிக முக்கியமான சொற்றொடர் What is your opinion? என்பதாகும். நாங்கள் சேர்ந்து வேலை செய்யும் போது எமது தோழர்களிடமோ. சக ஊழியர்களிடமோ அல்லது வீட்டில் கணவன், மனைவி, சகோதரர்களிடமோ “இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்க வேண்டும்.

மூன்று சொற்களைக் கொண்ட மிக முக்கியமான சொற்றொடர் Could you please என்பதாகும். எதையாவது இன்னொருவரிடம் கேட்கும் போது தயவு செய்து செய்வீர்களா என்று கேட்க வேண்டும்.

மிகமுக்கியமான இரண்டு சொற்கள் ‘Thank you’ உங்களிற்கு நன்றி என்பதாகும்.

மிகமுக்கியமான ஒருசொல் ‘We’ நாங்கள் என்பதாகும்.

மிகமுக்கியத்துவம் குறைந்த சொல் “I” நான்’ என்பதாகும். நான் என்பது முக்கியத்துவம் அற்ற சொல் அல்ல. அதன் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் ‘நான். என்னை, என்னால், எனக்கு’ என்று சிந்திப்பதை, பேசுவதை சற்றுக் குறைக்க வேண்டும்.

இவற்றைப் போன்று விஞ்ஞான ஆசிரியர்களாகப் பயிற்சி பெறும் உங்களுக்குக் கூறக்கூடிய சொற்றொடர்கள் உண்டா? என்று எண்ணிப் பார்த்தேன். இவற்றைப் போன்று இல்லாவிட்டாலும் ஆறு வித்தியாசமான சொற்றொடர்கள் என் மனத்தில் தோன்றின. விஞ்ஞான ஆசிரியர்களின் பண்புகள் ஏனைய ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளிலிருந்து வேறுபட்டவை அல்ல. விடயங்களை அனுகும் முறை வேறுபடலாம். ஆனால் அடிப்படைப் பண்புகள் ஒன்றுதான்.

உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் குறைந்த சொற்றொடர் “அது அப்படித் தான்’ என்பதாகும். பாடங்களில் பெரும்பாலான விடயங்களுக்கு விளக்கமுண்டு. சிலவற்றிற்கு அனுபவ ரீதியிலான காரணங்களுண்டு. எனவே மானவர்கள் விளக்கம் கேட்கும்போது ‘அது அப்படித்தான் என்ற பதில் பெரும்பாலும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

இப்போது உங்களுக்கு முக்கியமான ஆறு சொற்றொடர்களைப் பார்ப்போம். Love என்ற ஆங்கில சொல்லிற்கு காதல் என்னும் தமிழ்க் கருத்துக்கான் எங்களுக்குத் தெரியும். ஆனால் Love என்பது விரும்புதலையும் குறிக்கும் அன்பு காட்டுதலையும் குறிக்கும். முதலாவதாக நான் கூறவிரும்பும் சொற்றொடர் Love your subject என்பதாரும். உங்கள் பாடங்களை மனத்தால் விரும்பி ஆழ்ந்து படிக்கும் போதுதான் அதன் மெய்ப்பொருளைக் காண்பீர்கள். அப்போதுதான் அதைச் சொல்லிக் கொடுக்கும் தகுதி உங்களுக்கு வரும்.

கலீல் ஜிப்ரான் என்பவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தத்துவஞானி- சிறந்தசிந்தனையாளர். நீங்கள் உங்கள் வேலையை விரும்பிச் செய்யவில்லை. வெறுப்புடன் தான் செய்கிறீர்கள் என்றால், வேலையை விட்டுவிட்டு கோவில் வாசலில் இருந்து வேலையை விரும்பிச் செய்பவர்களிடமிருந்து பிச்சை பெற்று வாழ்வது எவ்வஎவோ மேல்” என்று அவர் கூறுகிறார்,

இரண்டாவதாக நான் கூற விரும்புவது Love your students என்பதாகும். உங்கள் மாணவர்களை நேசிக்காமல், அவர்களில் உண்மையான அன்பு செலுத்தாமல் நீங்கள் அவர்களுக்குப் பாடம் புகட்ட முடியாது. அவர்களும் ஏற்கமாட்டார்கள். ஒழுக்கமான அடக்கமான பிள்ளைக்கோ உங்களுக்கு ஏற்ற மாதிரி நடிக்கும் பிள்ளைக்கோ, அதிகாரம் மிக்கவர்களின் பிள்ளைக்கோ அன்புகாட்டுவது பெரிய வேலை அல்ல. விரும்ப முடியாத பிள்ளைக்கு அன்பு காட்டுவதுதான் உண்மையான அன்பு, விரும்ப முடியாத பிள்ளையே அன்பை மிக வேண்டும் பிள்ளையாகும், அந்தப் பிள்ளைக்கு வீட்டிலோ, வெளியிலோ எத்தனையோ தொல்லைகள் இருக்கலாம். அவைதான் அந்தப் பிள்ளை விரும்பப்பட முடியாத பிள்ளையாக இருப்பதன் காரணம். அந்தப்பிள்ளைக்கும் அன்பு காட்டுங்கள்.

மூன்றாவதாக இரு ஆசிரியருக்கு முக்கியமான சொல் Integrity ஆகும், இது நேர்மை, வாய்மை அல்லது நாணயம் என தமிழாக்கப்படலாம். நேர்மை என்பது சொன்னதைச் செய்வது மட்டும் அல்ல. செய்தவற்றைச் சொல்லும் துணிவும் நேர்மைக்குத் தேவை. வாக்களித்ததை நிறைவேற்றுவது மட்டும் நேர்மை அல்ல. எமது நண்பர்கள், உற்றார்கள், மாணவர்கள் எம்மீது கொண்ட நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் இருப்பதுவும் நேர்மை தான்.

நான்காவதாக ஒரு ஆசிரியருக்கு முக்கியமான சொற்றொடர் Teach skils outside the syllabus என்பதாகும். பாடசாலைக்கு வெளியே பாடவிதானங்களுக்கு அப்பால் மாணவர்களின் ஆற்றல் வளர உதவுங்கள். ஒரு ஐந்து வயதுச் சிறுவனுக்கு திசையறிகருவி ஒன்று கிடைத்தது. கண்ணுக்குப் புலப்படாத சக்தி ஒன்று அந்த ஊசியை எப்போதும் வடதிசையை நோக்கித் திருப்புவது அவனுக்கு நம்ப முடியாத அதிசயமாக இருந்தது. இது தான் கண்ணுக்குப் புலப்படாத விசைகளைப் பற்றிய ஆய்வுகளில் அவன் மனதைத் திருப்பியது.) பலவருடங்களின் பின் (இப்போது அந்தச் சிறுவன் பெரியவனாகி விட்டதால் அவர் என்று கூறுவோம்) அவர் கூறினார்: “நாங்கள் பெறக் கூடியவற்றுள் மிக அற்புதமான அனுபவம் ஒளிந்திருக்கும் மறை பொருட்களின் இரகசியம் தான். இதுவே எல்லா உண்மையான விருகுனங்களுக்கும் கலைகளுக்கும் ஆதாரமானது.” அந்தச் சிறுவன்தான் இன்று உலகின் முதல்நிலை விஞ்ஞானியாகப் போற்றப்படும் அல்பேட் ஜன்ஸ்ரைன்.

ஐந்தாவதாக ஆசிரியர்களுக்கு முக்கியமான சொற்றொடர் Teach values என்பதாகும். நல்லபண்புகளை, உயர்ந்த குணங்களைக் கற்பியுங்கள். வெறுமனே தொலைபேசியை மூடிவை’, தொலைக்காட்சியைப் பாராதே’ என்றெல்லாம் கட்டளையிடாதீர்கள், அது இளம் வயது. அறியும் பருவம். நீங்கள் கட்டாயப்படுத்தினால் உங்களுக்கு ஒளித்துச் செய்வார்கள். ஆரம்பத்திலேயே இவற்றின் நல்லது கெட்டது இரண்டையும் பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தனியே ஒன்றைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். இளம் வயதில் நல்லது. கெட்டது இரணமனதும் விளக்கம் தெரிந்தால் சிறுவர்களின் மனம் கெட்டதன் பக்கம் திரும்பாது,

எல்லார் வீட்டிலும் கத்தி இருக்கிறது, கத்தியால் கொலையும் செய்யலாம். எல்லார் வீட்டிலும் கொலைகள் நடப்பதில்லை. கத்தியையும் ஒருவரும் ஒளித்து வைப்பதில்லை. உண்மையில் கொலை செய்ய நினைப்பவர்களை கத்தியை ஒளித்து வைத்து தடுக்கவும் முடியாது. நன்மை, தீமை இரண்டையும் புரியவைப்பதே ஒரே வழி. வெறுமையான மனதுடன் வரும் சிறுவர்களின் மனதை திறந்த மனமாக்குங்கள், மூடிவிடாதீர்கள்.

இறுதியாக Helpthem to find them selves – தங்களை அறிவதற்கு அவர்களுக்கு உதவுங்கள். எங்களது நம்பிக்கைகள், எங்களது சந்தேகங்கள், எங்களது விருப்பு வெறுப் புக்கள், எங்களது ஆசைகள், பயங்கள் – இவைதான் நாங்கள் யார் என்பதை நிர்ணயிக்கின்றன. இவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் நாங்கள் சம்பவங்களுக்கு முகம் கொடுக்கும் விதத்தை விளங்கிக் கொள்ளலாம். சம்பவங்களை சிறந்த முறையில்கையாள இது எமக்கு உதவும். இதனைத்தான் தன்னை அறியும் அறிவு’ என்று ஞானிகள் கூறுகிறார்கள். இதனைத் தெரிந்தவர்களுக்கு தோல்வி என்பது இல்லை

கலாநிதி.நா.சிவபாலன் இரசாயனவியற்றுறை, யாழ்.பல்கலைக்கழகம்