இலங்கையில் வலுப்பெறும் இராணுவ நிர்வாகம்

பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, தமது அரசாங்கத்தில் இராணுவ ஆதிக்கத்தையும், தமக்கு நெருக்கமானவர்களுக்கான முக்கியத்துவத்தையும்  இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார். தற்போதைய அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்துவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இரண்டு வழிமுறைகளின் ஊடாக வளங்களைப் பெற்றுக் கொள்ளுகின்றார். அதில் முதலாவது வியத்மக. இரண்டாவது இராணுவப் பின்புலம். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனக்கு விசுவாசமான படை அதிகாரிகளையும், துறைசார் நிபுணர்களையும் கொண்டு உருவாக்கியது தான் வியத்கம.

நாட்டை வடிவமைப்பதற்கான கொள்கைகளை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த அமைப்புத் தான் கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் நுழைவுக்கான அத்திவாரத்தை இட்டது. இப்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும், அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே. கோத்தாபய ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அடித்தளத்தை இட்டுக் கொடுத்தது வியத்மக அமைப்பு தான். இதன் மூலம் தான், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட போரின், கதாநாயகனாக கோத்தாபய ராஜபக்ச மாற்றப்பட்டார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்ற போரின் உண்மையான கதாநாயகர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.

இதற்காக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன போன்றவர்கள் நூல்களை எழுதியும், கூட்டங்களை நடத்தியும் சிங்கள மக்கள் மத்தியில் கோத்தாபய ராஜபக்ச பற்றிய ஒரு பெரிய விம்பத்தை உருவாக்கினார்கள். வியத்மக, எலிய போன்ற அமைப்புகள் தனியே சிங்களப் பகுதிகளை இலக்கு வைத்தே செயற்பட்டன.  தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றியீட்டிய பின்னர், இந்த அமைப்புகளில் இருந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அரச நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்பட்டனர். அத்துடன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்தில் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்வதற்காக, வியத்மக அமைப்பு மற்றும் படை அதிகாரிகளைக் கொண்ட ஒரு வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக அல்லாத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, தன்னைப் பொதுவானவராகவே காட்டிக் கொண்டார். அதேவேளை, தனது முழுக் கட்டுப்பாட்டில் உள்ள வியத்மக அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பேரை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியலில் போட்டியில் நிறுத்தினார். அவர்களில் றியர் அட்மிரல் சரத் வீரசேகர கொழும்பு மாவட்டத்திலும், நாலக கொடஹேவ கம்பகா மாவட்டத்திலும் 3 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்து, மரபுசார் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்சவின் முக்கியமான இலக்குகளில் ஒன்று மரபுசார் அரசியலுக்கு அப்பால் செயற்படுவது. மரபுசார் அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு, துறைசார் நிபுணர்களை அரச நிர்வாகத்துக்குள் கொண்டு வருவது  அவரது முக்கியமான திட்டம். அதற்கான முதற்படியாகவே, அவரது தெரிவுகளும் அமைந்திருந்தது. பொதுத் தேர்தலில் வியத்மக சார்பில் நிறுத்தப்பட்ட 9 வேட்பாளர்களில் 8 பேர் அதிகளவு விருப்பு வாக்குகளுடன் தெரிவாகியிருக்கிறார்கள். தேசியப் பட்டியல் மூலமும் இருவர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

இவர்களில் நான்கு பேருக்கு முக்கியத்துவமான இராஜாங்க அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு பேருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது வியத்மகவினது அடுத்த கட்ட பாய்ச்சலுக்காக போடப்பட்டுள்ள அத்திவாரம். மாகாண சபைத் தேர்தலில் இன்னும் கூடுதலானவர்கள் இந்த அமைப்பில் இருந்து போட்டியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற வைக்கப்படுவார்கள். அது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரத்தை மேல் இருந்து கீழ் நோக்கி பலப்படுத்தும் செயற்திட்டமாக இருக்கும். ஜனாதிபதி தனது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு கையாளும் இரண்டாவது வளமாக இராணுவப் பின்புலமுடையவர்களைக் குறிப்பிடலாம். கோத்தபய ராஜபக்ச தன்னைச் சுற்றி நம்பிக்கையான இராணுவ அதிகாரிகள் இருப்பதையே விரும்புகிறார் என்பதை அவரது கடந்த 9 மாதகால ஆட்சி மிகத் தெளிவாக உணர்த்தி விட்டது.

அமைச்சுக்களின் செயலாளர்களாக, திணைக்களங்கள், சபைகளின் தலைவர்கள், பணிப்பாளர்களாக அவர் அதிகளவில் படை அதிகாரிகளை நியமித்திருக்கிறார். முன்னெப்போதும் இல்லாதளவுக்கு படை அதிகாரிகள் அரச நிர்வாகத்துக்குள் புகுத்தப்பட்டிருக்கிறார்கள். இது இராணுவ ஆட்சியை நோக்கி நாட்டை நகர்த்தும் ஆபத்துள்ளதாக எதிர்க்கட்சிகள், பொது அமைப்புகள் குரல் எழுப்பினாலும், அதனைக் கண்டுகொள்ளக் கூடிய நிலையில், ஜனாதிபதி இல்லை என்பது உண்மை. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டுள்ள 25 அமைச்சுக்களுக்கான செயலாளர்களில் 4 பேர் படை அதிகாரிகள். 25 பேர் கொண்ட அமைச்சரவையில் 4 பேர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது போல, 25 பேர் கொண்ட அமைச்சுக்களின் செயலாளர்களில் 4 பேர் படையதிகாரிகளாக உள்ளனர்

இதிலிருந்தே, தமது குடும்பத்தினருக்கும், இராணுவத்துக்கும் சம பிரதிநிதித்துவம் கொடுக்கின்ற ஒரு ஆட்சியை நடத்தவே ஜனாதிபதி எத்தனிக்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இவர்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும், சுகாதார அமைச்சின் செயலாளரான மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவும், விவசாய அமைச்சின் செயலாளரான மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவும் ஏற்கனவே பதவியில் இருந்தவர்கள் தான். இம்முறை வெளியுறவு அமைச்சின் செயலாளராக அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கையின் வெளிவிவகாரச் சேவை வரலாற்றில் படை அதிகாரி ஒருவர் வெளிவிவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது இது தான் முதல்முறை. இராஜதந்திரிகளாக படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லா இராஜதந்திரிகளையும் வழிநடத்துகின்ற முதன்மையிடத்துக்கு ஒரு படை அதிகாரி முதல் முறையாக கொண்டு வரப்பட்டிருக்கிறார். இதன் மூலம் மரபுசார் இராஜதந்திரிகள் முற்றாக ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஏற்கனவே இந்த நிலை சிவில் நிர்வாக சேவைகளில் காணப்பட்டது. அரச அதிகாரிகளை தூக்கி விட்டு, படை அதிகாரிகள் தலைமைப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார்கள். அந்த நிலை இப்போது வெளிவிவகாரச் சேவைக்கும் வந்து விட்டது. கடந்த 9 மாதங்களாக, ஜனாதிபதியின் மேலதிக வெளியுறவு செயலராக இருந்தவர் தான் அட்மிரல் கொலம்பகே. இவர் கடற்படையின் முன்னாள் தளபதியும் கூட.

இப்போது அவர் வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், இராணுவ அதிகாரப் பாதையில் தான், தற்போதைய அரசாங்கம் பயணிக்கப் போகிறது என்ற செய்தி சர்வதேசத்துக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், அமைச்சுக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக உள்நாட்டு விவகார அமைச்சு, இப்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ், ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் போன்றவற்றை கையாளுவது தான் உள்நாட்டு விவகார அமைச்சு. முன்னர் இது தனியான அமைச்சாக இயங்கி வந்தது. தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இதனைக் கொண்டு வந்து, தனது நேரடி கண்காணிப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஜனாதிபதி. இதன் மூலம், நாட்டின் சிவில் நிர்வாகம் முழுமையாக இராணுவ அதிகாரத்தின் கீழ் வரப்போகிறது, மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர்கள் மூலம் தான் நாட்டின் சிவில் நிர்வாகம் பிரதானமாக கையாளப்பட்டு வருகிறது.

உள்நாட்டு விவகார அமைச்சின் கீழ் இருந்த இந்தக் கட்டமைப்பு, இப்போது ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் சென்றுள்ளதால், இவற்றுக்கு பாதுகாப்புச் செயலாளராக உள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவே அதிபதியாக மாறியிருக்கிறார். இது, அரச நிர்வாக கட்டமைப்பு எவ்வாறு இராணுவ மயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு பிந்திய உதாரணமாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது ஆட்சியை இராணுவ நிர்வாகத்தை ஒத்த ஒரு நிலையை நோக்கியே கொண்டு செல்கிறார். ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட தலைவராக அவர் இருந்தாலும், அவருக்குள் உள்ள இராணுவத்தனம் தான் அவரது நிர்வாகத்தில் பிரதிபலிக்கிறது. அவரையும் வழிநடத்துகிறது. இராணுவ மயப்பட்ட ஒரு நிர்வாகத்துக்குள் நாடு சென்று கொண்டிருக்கின்ற போதும், ஆளும் தரப்பில் உள்ள மரபுசார் அரசியல்வாதிகள் கூட எதையும் செய்ய முடியாதவர்களாக மாறியிருக்கிறார்கள். இவ்வாறான நிலையானது, ஒரு பக்கத்தில் இராணுவ ஆட்சி வலுப்படுத்தப்படும் சூழல் கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் அதற்கு எதிரான, அதிருப்தி சக்திகள் ஒன்று திரளுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page