இலங்கை இராணுவ மயமாக்கலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதற்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் தென்படுவதாக எச்சரித்திருக்கும் 10 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படுகின்ற கைது, தடுத்துவைப்பு, அச்சுறுத்தல்கள் என்பவற்றை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றன.

இத்தகைய அச்சநிலை கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலிலிருந்து ஆரம்பமானதுடன், 2020 பொதுத்தேர்தல் பிரசாரங்களிலும் அதனை நிழலை உணரமுடிகிறது என்றும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச யூரர்கள் ஆணைக்கழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை, மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் உள்ளடங்கலாக 10 மனித உரிமைகள் அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அனைத்து இலங்கை மக்களினதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட வேண்டுமென்று, குறிப்பாக அண்மைக்காலமாக மனித உரிமைகள் பாதுகாப்பில் அடையப்பட்ட சாதகநிலைமைகள் மீண்டும் தலைகீழாவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையின் நட்புறவு நாடுகள், உதவியளிக்கும் சர்வதேச அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்களவான சிவில் அமைப்புக்கள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. முன்னர் சிவில் உத்தியோகத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட சில அரசாங்க கட்டமைப்புக்களுக்குத் தற்போது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோன்று அண்மையில் விசேட ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்பட்டதுடன், எந்தவொரு அரச அதிகாரிக்கும் பணிப்புரை விடுக்கின்ற அதிகாரம் அவற்றுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

இவை நாடு இராணுவமயமாக்கலை நோக்கிப் பயணிக்கும் புதிய போக்கு குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அதுமாத்திரமன்றி கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்களுடன் தொடர்புபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தற்போதைய ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், இராணுவத்தளபதி உள்ளடங்கலாகப் பலர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்நிலையில் அதிருப்தியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், முன்னர் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாகத் தற்போதைய அரசாங்கத்தின் விமர்சகர்கள் பொலிஸார், புலனாய்வுப்பிரிவு, அரச சார்பு ஊடகங்கள் என்பவற்றினால் இலக்குவைக்கப்படுகின்றார்கள்.

இம்மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ‘பொதுத்தேர்தலின் பின்னர் ஸ்தாபிக்கப்படும் புதிய அரசாங்கத்தினால் அரச சார்பற்ற அமைப்புக்களின் மீது விசேட அவதானம் செலுத்தப்படும் என்றும், குறிப்பாக அவற்றுக்கு வெளிநாடுகளிலிருந்து எவ்வாறு நிதியுதவிகள் கிடைக்கப்பெறுகின்றன என்பது பற்றி ஆராயப்படும் அதேவேளை சர்வதேச அமைப்புக்களின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும்’ என்று தெரிவித்தார் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை அண்மைக்காலங்களில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அச்சலா செனெவிரத்ன, சுவஸ்திகா அருலிங்கம், ஊடகவியலாளர் தரிஷா பாஸ்டியன், சமூகவலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக் ஆகியோர் இலக்குவைக்கப்பட்டு அவர்களது தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டமை குறித்த சம்பவங்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ரு ஊடகவியலாளர் அல்லது மனித உரிமை ஆர்வலர் மீது நிகழ்த்தப்படுகின்ற தாக்குதல் என்பது தனிநபரொருவர் மீதான தாக்குதல் மாத்திரமல்ல. மாறாக அனைத்து இலங்கையர்களாலும் ஒன்றிணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் என்பவற்றின் மீதும் நிகழ்த்தப்படுகின்ற தாக்குதலாகும்.

எனவே சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான அச்சறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், சட்ட நடவடிக்கைகளில் முறைகேடு, பொலிஸாரின் அதிகாரத்தைப் பிரயோகித்தல் ஆகியவற்றை உடனடியாக இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும்.

ரம்ஸி ரஸீக்கும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு செயற்படும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மனித உரிமைகளை நிலைநாட்டுமாறு இலங்கையை வலியுறுத்துவது அவசியமாகும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.