பெருநாளைக்கு ஷொப்பிங் வேணாமாம், ஆனால் தருமம் பண்ணட்டுமாம்.

கடந்த சில நாட்களாக முஸ்லிம் தலைமைகள் பல சேர்ந்து பெருநாள் ஷொப்பிங் பண்ண வேண்டாம் என அறிவித்தது எல்லோரும் அறிந்ததே. “கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் சோனிகள் தான்” என்று மறுபடியும் ஒரு பிரச்சினை வருவதைத் தடுக்கவும், அபரிமிதமான குஷியுடன் கொரோனா இருப்பதையே மறந்து எமது நாநா தாத்தா மார் ஷொப்பிங் பண்ணி கொரோனாவை வீட்டுப் பிள்ளையாக தத்தெடுத்து விடுவார்களோ என்ற பயத்திலும் இவ்வாறு முஸ்லிம் தலைமைகள் முடிவெடுத்தது ஒரு முக்கிய மற்றும் மெச்சத்தக்க படி.

ஆனாலும், சமூகத்தின் முதுகெலும்பு பொருளாதாரம். வியாபாரம் நடக்காவிட்டால் எவ்வாறு பொருளாதாரம் நிலை நிற்கும்? எல்லாவற்றுக்கும் ஹாஜியார் மாரிடம் ஸதகா கேட்கிறோம். அவர்களிடமே பணம் இல்லை எனில் ஏழை எளிய மக்களுக்கு எவ்வாறு உதவி செய்வது?

ஒரு ஜவுளிக் கடை ஹாஜியார் என்னுடன் கதைத்தார். அவர் சொன்னது:

“மூன்று சீசனை வைத்துத் தான் நாம் வியாபாரம் பார்க்கிறோம். சித்திரைப் புது வருடம், இரண்டு முஸ்லிம் பெருநாட்கள் மற்றும் க்றிஸ்மஸ் வருட இறுதி. கடந்த 21/4 க்கு பிறகு வந்த ஒரு வருடத்தில் இது போன்ற 4 சீசன் சரியாக வியாபாரம் நடக்கவில்லை. இப்போது பெருநாள் ஷொப்பிங் பண்ண வேணாமாம் ஸேர். அனைத்தையும் தர்மம் பண்ணட்டுமாம். எவ்வாறு தர்மம் பண்ண? நம்மிடம் தான் எல்லோரும் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் கிருபையால் முடிந்த அளவு கொடுக்கிறோம். ஆனால் வியாபாரம் இல்லாவிட்டால் நாளை நாமும் ஹதியா தான் கேட்க வேண்டும்!”

பெருநாள் ஷொப்பிங் போக வேண்டாம் சகோதர சகோதரிகளே! ஆனால் உங்கள் பக்கத்தில் உங்களோடு நெருங்கிப் பழகும் துணிக்கடை நாநாவிடம் 2 ஷல்வாரும் ஒரு சாரமுமேனும் முடிந்தவர்கள் வீட்டுக்கு ஓடர் செய்து தேர்ந்தெடுங்கள். காரகில்ஸ் கீல்ஸ் இல் அரிசி பருப்பு வகைகள் எடுப்பதை விட கீழ்க்கடை மாமாவிடம் வாங்குங்கள். உங்கள் பக்கத்தில் இருக்கும் வியாபாரிகளுக்கு உறுதுணையாக நின்று வலுக் கொடுங்கள். வியாபாரம் தான் இன்றைய உலகின் மிக முக்கிய பலம். இன்று இருக்கும் சிறு வியாபாரிகளையேனும் நாம் தற்போது இழந்து விட்டால் அவ்வாறான ஒரு நல்ல புது வியாபாரியை உருவாக்கி எடுக்க பல்லாண்டு காலம் செல்லலாம். அந்த நஷ்டத்தை எம்மால் ஈடு செய்ய முடியாது.

நீங்கள் ஸதகா தான் செய்ய வேண்டும் என்றால், முடிந்த அளவு பக்கத்தில் இருக்கும் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி பொருட்களை ஸதகா செய்யுங்கள். அது பெருநாள் உடைகளானாலும் சரி. உணவுப் பொருட்களானாலும் சரி.

கடை உரிமையாளர்களாகிய உங்களுக்கு சில அறிவுரைகள்:

  • கொரோனா பரவும் அபாயம் நிலவும் படி வியாபாரம் செய்ய வேண்டாம்.
  • துணிக்கடை வைத்திருக்கும் சகோதரர்கள் வீடுகளுக்கு உடைகளை அனுப்பியேனும் உங்களது நிரந்தர கஸ்டமர்ஸை திருப்திப் படுத்தி தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  • No Limit, Fashion Bug, Food City, Keells செல்லாமல் உங்களிடம் மக்கள் பொருட்கள் வாங்குவது அவர்களுக்கு அங்கு போக முடியாததனால் அல்ல. எனவே விலைகளை நியாயமாக வைத்து வியாபாரம் செய்யுங்கள். ‘சரியான காலம் தானே, நல்ல லாபம் பார்க்கலாம்’ என கஷ்ட காலத்தில் மக்களை உரித்தெடுக்க எத்தணிக்காதீர்கள்.
  • முச்சக்கர வண்டிகள் ஓடும் சகோதரர்களில் நீங்களும் ஒருவர் எனில், நீங்களும் ஒரு மிக முக்கியமான, நாட்டுக்கும் எமது உம்மத்துக்கும் மிகவும் தேவையான வியாபாரத்தை, சேவையை செய்கிறீர்கள். நியாயமான, முடியுமாயின் வழமையை விட 10 ரூபாயேனும் குறைந்த கட்டணத்தை சாதாரண மக்களிடம் அறவிடுங்கள்.
  • சகோதரர இன மக்களுடன் றஸூலுல்லாஹ் காட்டித் தந்தது போல கனிவோடும் நியாயமாகவும் நடந்து கொள்ளுங்கள்.

நினைவிருத்திக் கொள்ளுங்கள். செல்வத்தையும் சந்ததியினரையும் தருபவன் அல்லாஹ் ஒருவனே. அடுத்தவனை அடித்துப் பிழிந்து உறிஞ்சிக் குடித்து இந்த பொருளாதார சிக்கலில் இருந்து எம்மால் தப்பிக்க முடியாது. ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசை செய்து தூக்கி விடுவதன் மூலமே முடியும். “அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்”
சட்டத்தரணி ஷிஹார் ஹஸன்-

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page