2ஆவது பீ.சி.ஆர். இற்கு சந்தர்ப்பம் தரவில்லை பலவந்தமாக எரித்தனர் – குழந்தையின் தந்தை புலம்பல்

கொவிட் தொற்றுடன் மரணித்த நிலையில் கடந்த புதன்கிழமை (09) தகனம் செய்யப்பட்ட 20 நாட்கள் பூர்த்தியான குழந்தை ஷைக்‌ பாஸ்‌ தொடர்பான செய்தி நாடளாவிய ரீதியில்‌ சகல சமூகங்களுக்கும்‌ மத்தியில்‌ பாரிய அதிர்ச்சியினையும்‌
கவலையினையும்‌ ஏற்படுத்தியிருந்தது.

குழந்தையின்‌ உடலை தகனம்செய்யும்‌ சந்தர்ப்பத்தில்‌ கூட குழந்தைக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது என்பதனை வைத்தியர்கள்‌ தெளிவுபடுத்தியிருக்கவில்லை. குழந்தையின்‌ பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையின்‌ உறவினர்கள்‌ அதன்‌ உடலை தகனம்‌ செய்வதற்காக கடைசி வரை கையொப்பம்‌ இடவில்லை. மன்றாடி வேண்டிக்கொண்ட போதிலும்‌ இரண்டாவது பி.சி.ஆர்‌. பரிசோதனைக்கான சந்தர்ப்பம்‌ வழங்கப்படவில்லை. இறுதியில்‌ குழந்தையின்‌ உடல்‌ பலவந்தமாக எரிக்கப்பட்டது.

ஜனாஸா தொழுகையை நிறைவேற்றுவதற்கும்‌ அங்கு அனுமதிக்கவில்லை என்று பெற்றோர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌. குழந்தையின்‌ சாம்பலில்‌ பி.சி.அர்‌. செய்யுமாறு கோரிய நிலையில்‌ குழந்தையே இல்லாத போது சாம்பல்‌ எதற்கு என்று கூறி அதனை வாங்க மறுத்துள்ளனர்‌.

இந்நிலையில்‌ முன்னாள்‌ இராஜாங்க அமைச்சர்‌ ஸெய்யித்‌ அலி ஸாஹிர்‌ மெளலானா குறித்த குழந்தையின்‌ தந்‌ைத
மொஹமட்‌ பாஹிம்‌ அவர்களுடன்‌ தொலைபேசி மூலம்‌ தொடர்பு கொண்டிருந்தார்‌. இதன்‌ போது மொஹமட்‌ பாஹிம்‌ அவர்கள்‌ தெரிவிக்கையில்‌, நான்‌ முச்சக்கர வண்டி சாரதியாக தொழில்‌ செய்து வருகிறேன்‌. எனக்கு வயது 38 ஆகிறது.
எனது மனைவி ஸப்னாஸ்‌ அவர்களுக்கு 36 வயது. மூத்த மகள்‌ பாத்திமா சிப்காவுக்கு வயது ஆறு. இது என்னுடைய
இரண்டாவது குழந்தை. குழந்தைக்கு சளி ஏற்பட்டிருந்தது. அப்போது ஒரு வைத்தியரிடம்‌ காட்டி மருந்து எடுத்த பின்னர்‌ குழந்தை உற்சாகமாகவே இருந்தது. எனினும்‌ இரவான பின்னர்‌ மீண்டும்‌ குழந்தை சுகயீனமடைந்தது.

குழந்தையை இரவு 10.30 அளவில்‌ வைத்தியசாலையில்‌ அனுமதித்தோம்‌. குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள்‌ அதற்கு நியுமோனியா பாதிப்பு இருப்பதாக கூறினர்‌. மறுநாள்‌ அதிகாலை 4.45 மணியளவில்‌ அவசர சிகிச்சை பிரிவில்‌ அனுமதித்தனர்‌.
அதன்போது எம்மை பார்க்கவும்‌ அனுமதிக்கவில்லை. வேறு யாராவது இருந்தால்‌ பார்ப்பதற்கு அழைக்குமாறு கூறினார்கள்‌. நாங்கள்‌ திரும்பி வருகை தந்ததுடன்‌ குழந்தை குறித்து தொலைபேசி மூலம்‌ அடிக்கடி தொடர்பு கொண்டு விசாநித்தோம்‌.

வைத்தியர்கள்‌ குழந்தைக்கு பி.சி.ஆர்‌. செய்ய வேண்டும்‌ என்று கூறினார்கள்‌. பகலில்‌ மீண்டும்‌ விசாரித்தோம்‌. பி.சி.ஆர்‌. செய்தால்‌ தொடர்பு கொண்டு அறிவிப்போம்‌ என்றார்கள்‌. அனால்‌ அவர்கள்‌ தொடர்பு கொள்ளவில்லை. மாலை 4.30 மணியளவில்‌ நாம்‌ தொடர்பு கொண்ட போது, உங்களது குழந்தை 4 மணியளவில்‌ மரணித்து விட்டது என்று வைத்தியர்‌ கூறினார்‌. அதனை அவர்களாக அறிவிக்கவில்லை. நாம்‌ தொடர்பு கொண்ட போதேஅறிவித்தார்கள்‌.

வைத்தியசாலைக்கு சென்றதும்‌, கையொப்பம்‌ இடுமாறு கேட்டார்கள்‌. குழந்தையை தருவீர்களா? என்று கேட்ட போது, “இல்லை. குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்‌ தர முடியாது” என்றார்கள்‌. அதனால்‌ நான்‌ கையொப்பம்‌ இடவில்லை. ஆனால்‌ எனக்கும்‌ எனது மனைவிக்கும்‌ பி.சி.ஆர்‌. செய்த போது கொவிட்‌ தொற்று இல்லை.
இது குறித்து நாங்கள்‌ விளக்கம்‌ கோரிய போது அவர்கள்‌ சரியாக பதிலளிக்கவில்லை.

அதன்‌ பிறகு வெளியில்‌ பி.சி.ஆர்‌. செய்வதற்காக முயற்சித்த போது பலர்‌ உதவுவதற்கு முன்வந்தார்கள்‌. எனினும்‌ வெளியிலுள்ள தனியார்‌ வைத்தியாலையின்‌ வைத்தியர்கள்‌ அதற்கு சம்மதிக்கவில்லை. எனினும்‌ பி.சி.ஆர்‌. இற்கான மாதிரிகளை வைத்தியசாலையில்‌ இருந்து பெற்றுத்தந்தால்‌ தனியார்‌ வைத்தியசாலையில்‌ பரிசோதனை செய்யலாம்‌ என்று கூறினார்கள்‌. ஆனால்‌ அவ்வாறு வைத்தியசாலைகளில்‌ வழங்குவதில்லை என்றார்‌.

இதன்‌ போது அலி ஸாஹிர்‌ மெளலானா, “சகோதரர்‌ பாஹிம்‌, நான்‌ கேள்விப்பட்டேன்‌, ஊடகங்களில்‌ வெளியான விடயம்‌. அமைச்சர்‌ ஒருவரின்‌ சிறிய தாய்‌ மரணித்த நிலையில்‌ பி.சி.ஆர்‌. செய்த போது கொவிட்‌ தொற்று உறுதியாகிய நிலையில்‌ மீண்டும்‌ இரண்டாவது பி.சி.ஆர்‌. செய்யப்பட்ட நிலையில்‌ அது நிகடிவ்‌ அனது. அதன்‌ பிறகு அந்த ஜனாஸாவை அடக்கியிருக்கிறார்கள்‌. அவ்வாறு செய்ய முடியும்‌ என்ற இது ஒரு குழந்தை. பெற்றோருக்கு கொவிட்‌ இல்லை. இந்நிலையில்‌ மீண்டும்‌ பி.சி.ஆர்‌. செய்வதற்கு அனுமதித்திருக்க வேண்டும்‌ என்று தெரிவித்தார்‌.

இதன்‌ போது சகோதரர்‌ பாஹிம்‌, அதற்காகத்தான் நாங்கள்‌ மிகவும்‌ போராடினோம்‌. எனினும்‌ அல்லாஹ்வின்‌ ஏற்பாடு. பகல்‌ நேரத்தில்‌ அழைப்பு வந்தது. சடலங்களை வைக்கும்‌ பகுதிக்கு வருமாறு கூறினார்கள்‌. என்னுடைய மைத்துனரை அனுப்பி வைத்தேன்‌. அங்கு கையொப்பம்‌ இடுமாறு கோரியுள்ளனர்‌. ஆனால்‌ மறுத்து விட்டார்‌.

பிறகு குழந்தையின்‌ உடலை தகனம்‌ செய்வதற்காக கொண்டு செல்வதாக அழைப்பு வந்தது. எனது நண்பர்கள்‌ தகனம்‌ செய்யும்‌ அந்த இடத்திற்கு சென்றார்கள்‌. கையொப்பம்‌ இல்லாமல்‌ தகனம்‌ செய்ய முடியுமா என்று நண்பர்களும்‌ கேட்டுள்ளனர்‌. எனினும்‌ அவர்கள்‌ சரியான பதில்‌ அளிக்காமல்‌ குழந்தையின்‌ ஜனாஸாவை தகனம்‌ செய்துள்ளனர்‌. இது போன்று வேறு எவருக்கும்‌ நடக்காமல்‌ பாதுகாக்க வேண்டும்‌ என்றும்‌ தெரிவித்தார்‌.

இதன்‌ போது அலி ஸாஹிர்‌ மெளலானா “பொறுமையாக இருங்கள்‌. நான்‌ உங்களை சந்திக்க வருகிறேன்‌. ஏதாவது உதவி தேவை என்றால்‌ என்னை தொடர்பு கொள்ளுங்கள்‌. இது எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனை. நாங்கள்‌ முடியுமான
அளவு பாடுபடுவோம்‌. உங்களது குழந்தை சுவனத்திற்கு சென்றுள்ளார்‌. வீட்டில்‌ ஒருவருக்கொருவர்‌ ஆறுதல்‌ கூறிக்கொள்ளுங்கள்‌. எல்லோருக்கும்‌ இறைவன்‌ அருள்‌ புரியட்டும்‌.