அட்டுளுகம கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன்? நடந்தது என்ன? – இதோ முழுத் தகவல்

டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து முஸ்லிம் கிராமம் ஒன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் , பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம முஸ்லிம் ஊரே இவ்வாறு வெளித் தொடர்புகளில் இருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஊரை சேர்ந்த சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரம் பேர்வை இவ்வாறு அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி முழு ஊரையும் ஒரு தனிமைப்படுத்தல் நிலையம் போன்று முடக்கி வைத்துள்ளதாகவும், 14 நாட்களுக்கு அந்த ஊருக்குள் எவரும் செல்லவோ அங்கிருந்து எவரும் வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டாது என களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க மற்றும் களுத்துறை மாவட்ட செயலர் யூ.டி.சி. ஜயலால் ஆகியோர் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் -27- முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர், மிக நெருங்கிப் பழகிய 26 பேரை அவ்வூருக்குள்ளேயே பொது இடமொன்றில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்த சுகாதார துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அட்டுலுகம ஊரின் 6 கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உள்ளடங்கும் நபர்களே இவ்வாறு அவ்வூரின் சர்வோதய அமைப்பின் கட்டிடம் ஒன்றில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களை அங்கு தடுத்து வைத்து கண்காணிப்பதற்கான வசதிகளை இரானுவத்தினர் அந்த கட்டிடத்தில் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

அதன்படி இன்று முதல் இந்த 26 பேரும் மருத்துவ கண்கானிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளதாக இந்நடவடிக்கைகளை கண்காணிக்கும் இராணுவத்தின் கேர்ணல் கமல் ஜயசூரிய தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நபர், டுபாய்க்கு குறித்த அட்டுலுகம – மாராவ கிராமத்துக்கு மிக அருகில் உள்ள கலிடெங்மண்டிய கிராமத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார்.

டுபாயில் 2 நாட்கள் தங்கியிருந்த பின்னர் கடந்த 19 ஆம் திகதி நாட்டுக்கு வந்துள்ளார். இவ்வாறு வருகை தந்த அவர், சுகாதார தரப்புக்கோ அல்லது பாதுகாப்பு பிரிவினருக்கோ அது குறித்து அறிவிக்காமலும் சுய தனிமைபப்டுத்தலில் ஈடுபடாமலும் இருந்துள்ளார். ஊரெல்லம் சுற்றித் திரிந்துள்ள குறித்த நபர் தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி பண்டாரகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந் நிலையில் அன்றைய தினமே குறித்த நபரின் வீட்டுக்கு சுகாதார அதிகாரிகளுடன் பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது அந் நபரிடம் பொலிஸார் விசாரித்த போது முதலில் தான் டுபாய் சென்றதை அந்நபர் ஏற்றுக்கொள்ளாமல் மறைத்துள்ளார்.

நீண்ட விசாரணைகளின் போதே அவர் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை பொலிசாரும் சுகாதாரத் துறையினரும் அவ்வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந் நிலையில் மறுநாள் 25 ஆம் திகதி கொரோனா அறிகுறிகள் தென்படவே அவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா இருப்பது 26 ஆம் திகதி மாலை உறுதியான நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த நபர் டுபாயிலிருந்து வந்த பின்னர் முழு ஊரிலும் சுற்றித் திரிந்துள்ளதாகவும், பலரது வீடுகளுக்கும் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்தே முழு ஊரையும் முடக்கியதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க கூறினார். அந்த ஊருக்குள் உள் நுழையவோ வெளிச்செல்லவோ எவருக்கும் எக்காரணத்துக்காகவும் அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி அந்த ஊருக்குள் நுழைய, வெளியேற முடியுமான அனைத்து வழிகளையும் முடக்கியுள்ளதுடன் ஊரை சுற்றி 8 பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்ப்ட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டு ஊர் முழுதும் அவ்வப்போது ரோந்து பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

ஊரை சுற்றியும் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அனைவரையும் அவரவர் வீடுகளில் தனிமைப்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த கிராமம் முஸ்லிம் கிராமம் என்ற நிலையில், அங்கு மக்கள் மிகவும் நெருக்கமாக பழகி ஒன்றாக கூடி வாழ்ந்து வந்துள்ளதாகவும் அதனால் இந்த தொற்று பரவலுக்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதை கருத்தில் கொண்டு ஊரையே முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தொற்றாளருடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணியோரை தனியாக பிரித்தெடுத்து தனிமைப்படுத்தியதாகவும், ஏனையோரை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே தொற்றாளருடன் டுபாய் சென்று திரும்பிய அவரது நண்பருக்கு இதுவரை கொரோனா தொற்று அறிகுறிகள் காட்டாத நிலையில், அவரும் அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அந்நபருடனும் தொடர்புகளை பேணியவர்களை தேடிவரும் பொலிசார் அவர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க கூறினார்.

இதனிடையே இன்று காலை அட்டுலுகம – மாராவ பகுதியைச் சேர்ந்த கொரோனா தொற்றாளரின் தந்தை மற்றும் சகோதரிக்கு குறித்த தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து 1990 அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட அட்டுலுகம முடக்கப்பட முன்னர் அங்கு சென்று திரும்பியதாக கூறப்படும் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவரையும் அவ்வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page