20 ஆண்டுகளுக்கு பின்னர் சுத்தமான இலங்கை

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் கடந்த 20 வருட கால வரலாற்றில் வளிமண்டல காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக இலங்கையின் பிரதான நகரமாக திகழ்கின்ற கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்வின் ஊடாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் இலங்கையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் தொடர் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் காற்றுமாசடையும் வகையிலான செயற்பாடுகள் முழுமையாக முன்னெடுக்கப்படாத நிலையிலேயே இந்த வளிமண்டல காற்றுமாசு வீதம் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு, அநுராதபுரம், குருநாகல், புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதான நகரங்களில் வாகன போக்குவரத்துக்கள் இடம்பெற்றாத நிலையில், காற்றுமாசடைவது வெகுவாக குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்;.

கொழும்பு பகுதியில் தற்போதுள்ள வளிமண்டல காற்றுமாசு வீதம் குறித்து அவதானிக்கும் போது, மிகவும் சிறிய தூசியாக கருதப்படும் பி.எம் 2.5 தூசி மைக்ரோ கிராம் 10ஆகவே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பி.எம் 10 தூசி மைக்ரோ கிராம் 20 ஆகவே கொழும்பு நகரில் காணப்படுகின்றது என நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி கூறினார்.

குறிப்பாக கொழும்பு நகரில் கடந்த 20 வருடங்களில் பதிவான மிக குறைந்த காற்று மாசு வீதமாகவே தான் இதனை கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகர் மாத்திரமன்றி, ஏனைய நகரங்கள் தொடர்பில் ஆராயும் போது, கொழும்பு நகருக்கு சமனான வகையில் காற்றுமாசு வீதம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் காற்றுமாசு வீதம் மிகவும் குறைந்தவொரு காலப் பகுதியான இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக கூற முடியும் என சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும், காற்றுமாறு வீதம் இவ்வாறான நிலையிலேயே காணப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னரான நிலை தொடர்பிலும் அவர் தெளிவூட்டல்களை வழங்கினார்.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் மிகவும் சிறிய தூசியாக கருதப்படும் பி.எம் 2.5 தூசி மைக்ரோ கிராம் 50ஆக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் காற்றுமாசு குறைவடைந்து வந்த நிலையில், மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல் காற்று மாசு வீதம் மிகவும் குறைவடைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

வரலாற்றில் காற்றுமாசு அதிகரித்திருந்த காலம் எது?

2002ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான 10 வருட காலங்களில் காற்றுமாசு வீதம் அதிகரித்திருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

எனினும், 2012ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப் பகுதியில் காற்றுமாசு வீதம் குறைவடைந்திருந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், கடந்த ஆண்டு இதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில், 75 சதவீத காற்றுமாசு வீதம் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

2012ஆம் ஆண்டுக்கு பின்னர் காற்றுமாசு வீதம் குறைவடைய காரணம்?
கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் காற்றுமாசு வீதம் குறைவடைய பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.

வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முன்னெடுத்திருந்ததாகவும் சரத் பிரேமசிறி நினைவூட்டினார்.

அதுமாத்திரமன்றி, வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டமையும் காற்று மாசடைவது குறைந்து காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிநவீன வகையிலான ஐபிரிட் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதனால் வளிமண்டல காற்றுமாசடைவது குறைவடைந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், பிரதான நகரங்களில் வாகன போக்குவரத்து வீதம் அதிகரித்த பின்னணியில் 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் காற்று மாசு வீதம் சற்று அதிகரித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலைமையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா?

அனல் மின் உற்பத்தி நிலையங்கள், குப்பைகளை எரித்தல், வீட்டு உரிமையாளர்களின் செயற்பாடுகளினாலேயே தற்போது சற்று காற்று மாசடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது என சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.

எனினும், இந்த நிலைமை காலநிலை மாற்றத்தினால் மாற்றமடையும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

வாகன போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளமையினாலேயே காற்றுமாசு வீதம் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பட்சத்தில், காற்றுமாசு வீதத்தையும் எதிர்காலத்தில் குறைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.

காற்றுமாசு வீதத்தை குறைக்கும் வகையிலான திட்டங்கள் அடங்கிய அறிக்கைகளை தாம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் காற்றுமாசு வீதத்தை குறைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page