நமது ஆளுமைகள் – அக்குறணை முன்னாள் தவிசாளர் எஸ்.எம்.எஸ். சுலைமான்

அக்குறணை, ஹாரிஸ்பத்துவ பகுதிகளில் சகல இன மக்களாலும் மதிக்கப்பட்டு வந்தவர்தான் மர்ஹூம் எஸ்.எம்.எஸ்.சுலைமான்.

1951 ஆம் ஆண்டு அக்குறணை, குருகொடையில் பிறந்த இவர், ஆரம்ப கல்வியை அங்கும்புர சிங்கள மகா வித்தியாலயத்திலும், பின்னர் அலவத்துகொட சிங்கள மகா வித்தியாலயத்திலும் சிங்கள மொழி மூலம் கற்றார்.

க.பொ.த. (சா/த) பரீட்சையில் பல சிங்கள மாணவர்கள் சித்தியடைய தவறியபோது இவர் பௌத்த சமய பாடத்திலும் திறமையாக சித்தியடைந்ததால், சிங்கள மாணவர்கள் பல மைல் தூரம் அவரது வீடு வரை தோளில் சுமந்து வந்த சம்பவம் இன்றும் பேசப்படுகிறது.

அதேபோல் உயர்தர பரீட்சையில் திறமையாக சித்தி பெற்று வித்யோதய பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி அங்கு பட்டப்படிப்பை மேற்கொண்டார். பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் அரசியல் ஆர்வம் ஏற்பட்டதுடன் பலதரப்பட்ட கட்சித் தலைவர்களுடனான தொடர்புகள் அவருக்கு ஏற்பட்டது. பல மாணவர் அமைப்புகளிலும் அங்கம் வகித்தார்.

கல்வி கற்கும் காலத்தில் இருந்தே சிங்கள தமிழ் மொழி சிறந்த மேடைப் பேச்சாளராக திகழ்ந்த அவர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மர்ஹூம் ஏ.சீ.எஸ். ஹமீதுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டார்.

சிறிது காலம் அரச வங்கியொன்றில் கடமையாற்றியதுடன், 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சியினதும் மர்ஹூம் ஹமீதினதும் வெற்றிக்காக அரசியல் மேடைகளில் உரையாற்றியுள்ளார். எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் சிறந்த பேச்சாளராக, சலிப்பு ஏற்படாதவாறு பல மணி நேரம் பேசக்கூடிய திறமை அவரிடம் காணப்பட்டது.

1980 ஆரம்பத்தில் அவர் விவசாய திணைக்கள ஹாரிஸ்பத்துவ விவசாய அபிவிருத்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டார். சிறிது காலம் மர்ஹூம் ஏ.சீ.எஸ்.ஹமீதின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். முதன் முதலாவதாக அக்குறணை பிரதேச சபை உருவாக்கப்பட்டபோது இப்பிரதேசத்தில் சுமார் 65 வீதம் முஸ்லிம்களும் 30 வீதம் சிங்களவர்களும் 5 வீதம் தமிழர்களும்
வாழ்வதால் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளராக ஒரு முஸ்லிம் தெரிவுசெய்யப்பட வேண்டும். அவர் சிங்கள தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவராகவும், அவர்களது ஆதரவை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

ஆகவே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் சுலைமான் எனக் கருதி அவரை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
அதன்படி தான் வகித்த அரச உத்தியோகத்தை விட்டு விலகி 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று அக்குறணை பிரதேச சபையின் முதலாவது தவிசாளராக நியமிக்கப்பட்டதுடன், மரணிக்கும் வரை மூன்று முறை தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

அவர் போட்டியிட்ட நான்கு தேர்தல்களிலும் அவரே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். மூன்று முறை தவிசாளராகவும் ஒரு முறை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த காலத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சகல உறுப்பினர்களினதும் நன்மதிப்பை பெற்றவராக செயற்பட்டார். அதனால்தான் அவர் தவிசாளராக சமர்ப்பித்த சகல வரவு செலவுத் திட்டங்களும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இவர், அரசியல், இன, மத, வேறுபாடின்றி சகலருக்கும் சேவை செய்யும் ஒருவராகவே அவர் திகழ்ந்தார். முஸ்லிம்களை விட சிங்கள மக்கள் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தனர். 1987 1988 காலப்பகுதியில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகளின்போது ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் இவரை சிங்கள இளைஞர்கள் பாதுகாத்தனர்.

அவரது வீட்டை கூட இரவு பகலாக பாதுகாத்து வந்தனர். அண்மைக் காலங்களில் இடம்பெற்ற நல்லிணக்க கூட்டங்கள் கலந்துரையாடல்களின் போது சிங்கள மக்கள் பௌத்த மதகுருமார்கள் இவரது நற்பண்புகளை நினைவுகூரவே செய்தனர்.

பிரதேச அபிவிருத்தியில் மிகவும் துடிப்புடன் செயலாற்றிய அவர், அக்குறணை பிரதேச சபை தவிசாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் மரணித்தபோது பௌத்த மதகுருமார்கள் அவரது வீட்டுக்கு வந்து பௌத்த மத அனுஷ்டானங்களை
நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

2008.02.14 ஆம் திகதி மரணித்த அவரது ஜனாசா அக்குறணை குருகொடை முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னதுய் பிர்தவ்ஸ் எனும் சுவனம் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.
(அபூ ரனாஸ்)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page