இலங்கை தேர்தல் களத்திலும் சூடு பிடிக்கும் 80/20 விதி !!?

ஜனநாயகம் என்று கூறப்படுகின்ற உலகில் பல்வேறு நாடுகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும் அதனை தக்க வைத்துக் கொள்ளவும் அரசியல்வாதிகள் பல்வேறு திட்டங்களை வகுக்கின்றனர். அவ்வாறு வகுக்கப்படுகின்ற தேர்தல் வெற்றி இலக்கை நோக்கிய திட்டங்கள் ஒருபோதும் மக்கள் நல திட்டங்களாக அமைந்ததில்லை. 

தனது நாட்டு பொருளாதாரத்தை உயர்த்தி விட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு விதியை இன்று நாட்டை ஆளும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கபடத்தனமாக பயன்படுத்தி வருகின்றனர். 

இத்தாலிய பொருளாதார வல்லுனர் வில்பிரடோ பரேட்டோ 80/20 விதியை 1896 ஆம்ஆண்டில் கண்டுப்பிடித்தார்.  எனவே 80/20 விதியை பரேட்டோ கொள்கையாக இன்று வரையில்அழைக்கப்படுகின்றது. அதாவது 20 வீத உள்ளீடு 80 வீத வெளியீட்டை கொண்டுள்ளது என்பதே இந்த விதியின் சாரம்சமாகும்.

இத்தாலிய பொருளாதாரத்தை வில்பிரடோ பரேட்டோ ஆராய்ந்த போது நாட்டின் 80 வீதமான சொத்துக்கள் வெறும் 20 வீதமான மக்களிடம் காணப்பட்டதை கணிப்பிட்டுக் கொண்டார். இவ்வாறானதொரு நிலையில் தன்னாட்டு பொருளாதாரத்தினை வளர்ச்சிபாதையை நோக்கி கொண்டுச் செல்ல தனது 80/20 விதியை கையாண்டார். 

உதாரணமாக ஒரு புத்தகத்தின் 20 வீத பக்கங்கள் தான் அந்த புத்தகத்தின் 80 வீததகவல்களின் உள்ளடக்கமாக இருக்கும். நாம் செய்யும் 20 வீதமான வேலைகள் தான் 80 வீதமான பலன்களை தரும் என்பதே இதன் மற்றுமொரு விளக்கத்திற்குறிய சாரம்சமாகும். இதில் 80 வீதம் என்பது பெரும்பான்மையும் 20 வீதம் என்பது சிறுபான்மையையும் குறிக்கும். இந்த விதியானது பொருளாதாரத்திற்கு மாத்திரமல்ல அனைத்து துறைக்கும் பொறுந்தும் என்பதை வில்பிரடோ பரேட்டோ அன்றே  கூறி விட்டார். 

Read:  மீண்டும் ரணில் !!

இந்த விதி எவ்வாறு அரசியல் இலக்குகளுக்காக தந்திரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது . அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் 2015 ஆம் ஆண்டு ஜுன் 16 ஆம் திகதி தேர்தலில் போட்டியிட போவதாக முதன் முதலில் அறிவித்தார். இதன் பின்னர் அவர் அமெரிக்காவில்வாழும் சிறுபான்மை இனங்களை குறி வைத்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். 

உதாரணமாக மெக்சிகோவிலிருந்து வருபவர்கள் போதைப்பொருள்கடத்தல் காரர்கள் , பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளிலும் ஈடுப்படுகின்றனர். இவர்களால் தான் அமெரிக்காவில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றது என கடுமையாக விமர்சித்தார். அதே போன்று 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி கெலிபோனியாவில்  சென் பெர்னார்டினோ நகரில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து அமெரிக்காவிற்குள் வரும் எந்தவொரு நாட்டு முஸ்லிம்களுக்கும் வாய்ப்பளிக்ககூடாது என டொனல்ட் டிரம்ப் தொடர்ந்தும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கடுமையாக தாக்கி உரையாற்றினார். 

மேலும் டொனல்ட் டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளும் மிக முக்கியமானவையாகும். அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் மிக பெரிய சுவரை எழுப்பி சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பேன். அமெரிக்கர்களின் பாதுகாப்பை 100 வீதத்தால் உறுதிசெய்வேன். இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பேன். தொழில் வாய்ப்புகள் அனைத்தும்அமெரிக்கர்களுக்கே வழங்குவேன் என பல உறுதிமொழிகளை வழங்கினார். 

இதுவே ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய விடயங்களாக காணப்பட்டதுடன் , சமூகவலைத்தளங்கள் உட்பட அனைத்து பிரசார மூலங்கள் ஊடாகவும் அமெரிக்கர்களை உயர்த்தியும் அங்கு வாழ கூடிய சிறுபான்மை இனங்களை தாக்கியும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. பெரும்பான்மையான அமெரிக்கர்களின் வாக்குகளை முழுமையாக குறி வைத்து சிறுபான்மை இன மக்களை தாக்கினார். இதுவே அவரது தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.  

Read:  ரணிலிடமும் புதிய தீர்வுகள் இல்லை!

இதே போன்று தான் பாராதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் மூலோபாய திட்டத்தையும்வகுத்திருந்தது.  பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய வாக்குறுதிகளை கவனத்தில் கொண்டால் இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது திருத்தம்  குடியுரிமை சட்டம் , பொது சிவில்சட்டம் மற்றும்  அயோத்தியாவில் ராமர்கோவில்  என அங்கு வாழ கூடிய சிறுபான்மை இன மக்களை தாக்கும் வகையிலேயே காணப்பட்டது.

இது போக 2019 ஆம் பெப்பரவரி 14 புல்வாமா தாக்குதல்  , அதற்கு எதிரா 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 சேர்ஜிகல் ஸ்ரைக் என தொடர்ந்தார். 20 வீதமான சிறுபான்மையை தாக்கி 80 வீதமான பெரும்பான்மை வாக்குகளை குறி வைத்து பிரசாரங்களில் ஈடுப்பட்டார். டொனல்ட் டிரம்பை போன்ற இங்கும் டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் முக்கிய இடம் பிடித்தது. 303 ஆசனங்களுடன் மிக பெரிய வெற்றியை நரேந்திர மோடி அன்று பெற்றுக் கொண்டார். இங்கும் 80/20 விதிதான் பின்பற்றப்பட்டது.

இலங்கையிலும் அதே விதிதான் பின்பற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டிலேயே விடுதலைபுலிகளுக்கு எதிரான போர் முடிவு கண்டிருந்ததால் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் புலிகளுக்கு எதிரான பரப்புரையில் பெரும்பான்மையின் முழுமையான ஆதரவை பெற்றுக் கொள்வது கடினமானதாகவே அமைந்தது. 

எனவே தான் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் பல மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.அதற்கு மிகவும் சாதகமான சூழலை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் ஏற்படுத்தியது. இந்த தாக்கல்இடம்பெற்று சரியாக ஓரு வார காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக கோதாபய ராஜபக்ஷ அறிவித்தார்.  

Read:  மீண்டும் ரணில் !!

இவரது தேர்தல்வாக்குறுதிகளாக அடிப்படைவாதம் ,  தீவிரவாதம் என்பவற்றை ஒழிப்பேன், அடிப்படைவாதத்தை அழிப்பேன் , கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என தென்னிலங்கை சிங்கள மக்களை உற்சாகமூட்டும் விடயங்களையே முன் வைத்தார். 

தனது முழு ஆதரவு மற்றும் கொள்கைகள் பெரும்பான்மை இனமான சிங்கள பௌத்தர்களுக்கானது என்பதை கோதாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியதுடன் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான பிரசாரங்களை அவர்சார்ந்தவர்கள்ஊடாக முன்னெடுக்கப்பட்டது. இதனால் தனி சிங்கள வாக்குகளால் கோதாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றதுடன் சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் முழு அளவில் எதிர்தரப்பிற்கே சென்றது. இங்கு 80 குறிவைத்து 20 நசுக்கி பொறிமுறையே முன்னெடுக்கப்பட்டது.

இந்த விதியை பயன்படுத்துபவர்களின் நோக்கம் ஆட்சியை பிடிக்கவே தவிர சிறுபான்மை இனத்திற்கோ பெரும்பான்மை இனத்திற்கோ நன்மையை செய்வதற்காக அல்ல. மாறாக ஆட்சி அதிகாரம் மாத்திரமே இவர்களின் இலக்காகியுள்ளது.