வீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி பத்திரிகைகளை போலியாக தயாரித்த நபர் சிக்கினார் – ஆரம்பகட்ட தகவல்கள் இதோ!

தேசிய தமிழ் பத்திரிகைகளான வீரகேசரி, தினக் குரல் மற்றும் சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளின் சில பிரதிகளை, போலியாக தயாரித்து, அதனை  வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக பயன்படுத்த திட்டமிட்ட நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் ( சி.ஐ.டி.) கைதுசெய்யப்பட்ட 31 வயதான பாலசுப்ரமணியம் செந்தூரன் என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில், அவருடன் இந்த விவகாரம் தொடர்பில், தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் ஜேர்மனியில் உள்ள ஒருவர் தொடர்பில் தற்போது சி.ஐ.டி. சிறப்பு விசரணைகளை நடாத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன வீரகேசரிக்கு தெரிவித்தார்.

குறித்த ஜேர்மனியில் உள்ள நபரின் பின்னணி, அவருக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புகள், இவ்வாறான  நடவடிக்கைகளுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதன் பின்னணி தொடர்பில் விரிவான விசாரணைகள் நடாத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்த சிறப்பு விசாரணைகளை சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கட்டுப்பாட்டில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின்  ஆலோசனைக்கு அமைய சிறப்பு குழுவொன்று முன்னெடுத்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை,  கிரிபத்கொட நகரில் ,  போலியாக தயாரிக்கப்பட்ட வீரகேசரி, தினக்குரல் மற்றும் சுடர் ஒளி பத்திரிகைகள், சில போலி இறப்பர் முத்திரைகளுடன் , இலக்கம் 227/16, முகத்துவாரம் வீதி கொழும்பு 15 ஐ சேர்ந்த 31 வயதான பாலசுப்ரமணியம் செந்தூரன் என்பவரை சி.ஐ.டி. கைது செய்திருந்தது.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு

குறித்த நபர் தேசிய தமிழ் பத்திரிகை ஒன்றில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பக்க வடிவமைப்பாளராக செயற்பட்ட, கிராபிக் டிசைனிங் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்துள்ள ஒருவராவார் என பொலிஸார் கூறினர்.

2017 ஆம் ஆண்டு பத்திரிகை தொழிலில் இருந்து விலகியுள்ள குறித்த நபர்,  ருமேனியா செல்ல முயற்சித்துள்ளதுடன், கொட்டிகாவத்தை பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு  முகவர் நிறுவனம் ஒன்றினூடாக அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த மே 28 ஆம் திகதி நேர்முகத் தேர்வுக்கும் முகம்கொடுத்துள்ள அவர், அங்கு செல்ல 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பணம் கோரப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல குறித்த முகவர் நிலையத்துக்கு கோரப்பட்ட பணத் தொகையில் 80 ஆயிரம் ரூபாவை சந்தேக நபர் வழங்கியுள்ளார்.

இந் நிலையிலேயே ருமேனியா சென்று அங்கிருந்து ஜேர்மனி அல்லது பிரான்ஸில் அரசியல் தஞ்ஞசம் கோர, தான் இலங்கையில் பத்திரிகை துறையில் இருந்ததாகவும், அப்போது எழுதிய எழுத்துக்களால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும், இந் நாட்டில் தனக்கு மத, அரசியல் ரீதியில் அநியாயம் நடந்துள்ளதாகவும் காட்டுவதற்கு போலியாக தேசிய தமிழ் பத்திரிகைகளை தயாரித்து, அதனை கிரிபத்கொடை பகுதி தனியார் அச்சகமொன்றில் அச்சிட்டுள்ளார்.

இந் நிலையில் இது தொடர்பில் சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த பத்திரிகைகளின் ஆசிரியர்களிடம் விஷேட வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சி.ஐ.டி. கைப்பற்றிய போலி தமிழ் செய்திப் பத்திரிகைகள், உண்மையில் குறித்த தேசிய பத்திரிகைகளை வெளியிடும் நிறுவனங்களால் அச்சிடப்பட்டவை அல்ல என தெரியவந்ததாக பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன வீரகேசரிக்கு தெரிவித்தார்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு

இந் நிலையில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட, சந்தேக நபரிடமிருந்து மேலும் சில விடயங்களை சி.ஐ.டி. வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.

இதன் பிரகாரமே ஜேர்மனியில் உள்ள நபர் ஒருவர் தொடர்பிலான வலையமைப்பு குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதுசார்ந்த மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன.

இந் நிலையிலேயே நேற்று சந்தேக நபர், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

VIAவீரகேசரி பத்திரிகை ( எம்.எப்.எம்.பஸீர்)