இனநல்லுறவின் அடையாளம் ஏ.சி.எஸ்.ஹமீத்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் 1999 செப்டம்பர் 3ம் திகதி காலமானார். தனது அர்ப்பணமிக்க சேவைகள் காரணமாக சகல இனங்களினதும் அன்புக்குப் பாத்திரமான ஒரு அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார். இன்றையஅரசியல்வாதிகளில் பலர் இனவாதத்தில் செயல்பட்டு வருகின்ற வேளையில், இந்நாட்டின் இனநல்லுறவின் அடையாளமாகத் திகழ்ந்தவர் ஏ.ஸி.எஸ் ஹமீட்.

அவர் கண்டி மாவட்டத்தின் அக்குறணை தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்தார். பின்னர் ஹரிஸ்பத்துவ தொகுதியில் 1960 முதல் 1999 வரை 39 வருடங்களாக பிரதிநிதியாக இருந்தார். இவர் பிரதிநிதித்துவம் செய்த மத்திய மாகாணத்தின் முஸ்லிம் சனத்தொகைஅன்று 14 வீதம் மட்டுமே. மீதி 86 சதவீதம் சிங்களவர்களும் ஏனைய இனத்தவர்களுமே காணப்பட்டனர்.

இந்தப் பிரதேசம் சுமார் 134 கிராமங்களை உள்ளடக்கியது. அவற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பல பெரும்பான்மை வேட்பாளர்கள் இருந்தபோதும் அந்த மக்கள் ஹமீதுக்கே வாக்களித்தனர்.

அவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் நெருங்கியஆதரவாளராகத் திகழ்ந்தார். அரசியல் ரீதியாக ஜே.ஆர் உச்சத்தில் இருந்த காலத்திலும் அவர் நெருக்கடியில் இருந்த காலத்திலும் அவருடன் கூடவே இருந்த ஒருவர்தான் ஹமீட். இந்த விசுவாசத்துக்கு ஜே.ஆரும் கைமாறு செய்யத் தவறவில்லை. ஜே.ஆர் அவருக்கு அளித்த மிகப் பெரிய கௌரவம்தான் அவரை வெளிநாட்டு அமைச்சராக நியமித்தது. சுதந்திரத்துக்குப் பின் 1948 முதல் நாட்டின் பிரதமரே வெளிநாட்டு அமைச்சராகவும் இருந்து வந்துள்ளார்.

பிரதமர் அல்லாத ஒருவர் வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்ட முதலாவது சம்பவம் ஏ.ஸி.எஸ். ஹமீட்டின் நியமனம்தான். இன்று தமக்கென சொந்தக் கட்சிகளை உருவாக்கிக் கொண்டு முஸ்லிம்களை இனவாத அரசியலுக்குத் தூண்டி வரும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருந்தார் அவர்.

Read:  மீண்டும் ரணில் !!

பாராளுமன்றத்தில் அவரின் பங்களிப்பு மகத்தானது. பல்வேறு விடயங்களில் அவர் பெறுமதிமிக்க பங்களிப்புகளை வழங்கி உள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவர் பல்வேறு விடயங்களிலும் ஆற்றல் உள்ளவராகத் திகழ்ந்ததால் ஆகும்.

அவர் அணிசேரா அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராகவும் கடமையாற்றினார். அமெரிக்க_ – ஈரான் நெருக்கடிகள் உட்பட பல்வேறு சர்வதேச விடயங்களில் தீர்மானங்களைக் கொண்டு வருவதிலும் அவர் ஆழமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தார்.பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அவர் ஒரு விற்பன்னராகத் திகழ்ந்தார். அணிசேரா அமைப்பின் பல நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளார்.

உள்நாட்டில் இன முரண்பாட்டைத் தீர்த்து வைக்கும் வகையில் அவர் அரசாங்கத்தின் சார்பில் விடுதலைப் புலிகளுடனும் முக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.புலிகளின் பிரதான பேச்சாளராக இருந்த அன்டன் பாலசிங்கத்தின் மனைவிஅடேல் பாலசிங்கம் எழுதிய நூலில் ஹமீத்தின் பங்களிப்பு பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளைகுடா ஒத்துழைப்புத் தாபனம் உட்பட அதன் அங்கத்துவ நாடுகளான சவூதி அரேபியா,குவைத், பஹ்ரேன்,ஓமான்,கட்டார் மற்றும் லிபியா,ஐக்கிய அரபு இராச்சியம்,சிங்கப்பூர்,மலேஷியா,தென் கொரியா என பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி அந்த நாடுகளில் இலங்கையின் இராஜதந்திரஅலுவலகங்களைத் திறந்து வைப்பதிலும் அவர் முன்னோடியாகச் செயற்பட்டார். இதன் பலனாத்தான் இன்று அந்த நாடுகளில் இலட்சக்கணக்கான இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர்.

வெளியுறவுச் சேவையில் அவர் அமைச்சராகச் செலுத்திய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 1978இல் கொரியக் குடியரசின் ஹான்க் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் அவருக்கு கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது. ஜனாதிபதி பி​ரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் ஹமீத் உயர்கல்வி,விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் அவர் நீதி,உயர்கல்வி திட்டமிடல் அமைச்சராகவும் பணியாற்றினார்.

Read:  ரணிலிடமும் புதிய தீர்வுகள் இல்லை!

அவர் சில நூல்களையும் எழுதி உள்ளார். ‘இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பானஒருகண்ணோட்டம்’, ‘அணிசேரா மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகளில் சமாதானத்தை நாடி’ , ‘ஆந்தையும் தாமரையும்’,’அன்பினதும் கருணையினதும் நீரூற்று’ ஆகிய நூல்கள் அவற்றுள் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

SOURCEலத்தீப் பாரூக்