மத, இன ரீதியான பெயர்களைக் கொண்ட கட்சிகள் தொடர்பில் ஆராய்வு

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் மத அல்லது இன ரீதியான பெயர்களைக் கொண்டுள்ள கட்சிகள் தொடர்பிலும் , கட்சிகளின் யாப்பில் இவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் அது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கும் தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் தலைமையில் ஐவர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த கூட்டத்தின் போது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

அத்தோடு இக் கூட்டத்தில் உத்தேச தேர்தல்களை இலக்காகக் கொண்டு தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கான பிரிவிற்கு நியமிக்கப்படவுள்ள அரச ஊழியர்கள் , பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் உறுப்பினர்கள் என்போருக்காக சகல மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏப்ரல் இறுதி வாரம் முதல் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளால் 2019 ஆம் ஆண்டு தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய கணக்காய்வு அறிக்கையை இதுவரையில் வழங்காத 4 கட்சிகள் இனங்காணப்பட்டுள்ளன. குறித்த 4 கட்சிகளும் இம்மாதம் 22 ஆம் திகதி அதனை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்காவிட்டால் அக்கட்சிகளை இடைநிறுத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

-வீரகேசரி பத்திரிகை-

Read:  பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?