மாகாண சபைத் தேர்தலை கைவிடாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றிணைத்து போராடுவோம் – சோபித தேரர் எச்சரிக்கை

தேர்தல் காலத்தில்  ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த முயற்சிக்கிறது. 

மாகாண சபை முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது. மாகாண சபை தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுப்படுவோம் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

எம்பிலிபிடிய பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு நாட்டு மக்கள் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. மாறாக அரசியல்வாதிகளே  மாகாண சபை முறைமை ஊடாக இலாபம் பெற்றுக் கொள்ள  போராடுகிறார்கள். 

தேர்தல் காலத்தில்  ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த முயற்சிக்கிறது.

மாகாண சபை தேர்தல் இலங்கைக்கு பொருத்தமற்றதாக உள்ளது. மாகாண சபை முறைமை ஊடாக எவ்வித பயனும் ஏற்படவில்லை. மாறாக  மிதமிஞ்சிய செலவுகள் மாத்திரமே ஏற்பட்டுள்ளன. 

தேர்தல் முறைமை காரணமாக மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. மாகண சபை நிர்வாகம்  ஜனாதிபதியின் பிரதிநிதிகளினால் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மாகாண சபை முறைமையை முழுமையாக இரத்து செய்து உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துமாறு  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 

அரசியல்வாதிகளின் சுய நல தேவைக்காக மாகாண சபை முறைமை நிர்வகிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஆகவே, மாகாண சபை தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுப்படுவோம்.

Read:  குண்டு விவகாரம் : கைதான வைத்தியரை மன நல பரிசோதனைக்கு உட்படுத்த திட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொருளாதார ரீதியில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனை விடுத்து மாகாண சபை தேர்தலை நடத்த முயற்சிப்பது பயனற்றது என்றார். -வீரகேசரி பத்திரிகை- (இராஜதுரை ஹஷான்)