இலஞ்ச, ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மொஹான் பீரிஸ், நவாஸ் உள்ளிட்ட மூவர்

முன்னாள் சட்டமா அதிபரும் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ், முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் தற்போதைய நீதியரசர் திலீப் நவாஸ் உள்ளிட்டோர் இலஞ்ச, ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவினை கொழும்பு தலைமை நீதிவான் புத்த ஸ்ரீ ராகல இன்று பிறப்பித்தார்.

கடந்த 2010 டிசம்பர் முதலாம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்கள், சில முன்னணி ஊழியர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் ஆராய சிறிபால ஜயலத் குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழுவின் அறிக்கையில் அம்மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில்  குறித்த அறிக்கையின் பிரகாரம் குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்ய முடியாது என தீர்மானித்து அதனை தமது கருத்தாக கடிதம் மூலம் முதலாம் சந்தேக நபர் மூன்றாம் சந்தேக நபருக்கு கொடுத்ததன் ஊடாக   லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ்  துஷ்பிரயோகம் எனும் குற்றத்தை புரிந்துள்ளதாக மூவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் சட்டமா அதிபரும் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக செயற்பட்ட, தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான எம்.எம்.சி.பெர்டினாண்டோ ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-வீரகேசரி பத்திரிகை-

Previous articleமக்களை எமனிடம் அனுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம்: சஜித்
Next articleமாகாண சபைத் தேர்தலை கைவிடாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றிணைத்து போராடுவோம் – சோபித தேரர் எச்சரிக்கை