சூயஸ் கால்வாயில் கப்பலால் இலங்கையில் எரிபொருள், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை

சூயஸ் கால்வாயில் பாரிய சரக்கு கப்பல் சிக்குண்டிருக்கின்றமையால் இலங்கையில் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.

எனினும் இதே நிலைமை நீண்ட நாட்களுக்கு தொடருமாயின் இது இலங்கையின் ஏற்றுமதித்துறையில் தாக்கம் செலுத்தும் என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

குறித்த சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்குண்டுள்ளமையால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் அதன் விலை அதிகரிக்கக் கூடும் என்று பரவலாக முன்வைக்கப்படுகின்றமை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

மத்திய கிழக்கில் கல்ஃப் வலயத்தினூடாகவே எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு எரிபொருள் கப்பல்கள் வருகை தரவுள்ளன.

எனவே சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் இலங்கையில் பெற்றோலிய நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும் இதே நிலைமை தொடருமாயின் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும்.

அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதி செயற்பாடுகளில் 60 சதவீதமானவை சுயெஸ்கால்வாயினூடாகவே இடம்பெறுகின்றன. 

எனினும், இலங்கையின் பிரதான இறக்குமதியாளர்கள் சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளாகும். 

எனவே, இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்று பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

எரிபொருள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் இலங்கை பெற்றோல் களஞ்சி முனைய நிறுவனத் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் தெரிவிக்கையில் ,

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

தற்போது எம்மிடம் அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் களஞ்சியசாலைகளில் உள்ளன. எனவே, வீண் அச்சமடைய வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். 

இந்த நிலைமையின் காரணமாக எரிபொருள் விலை பாரயளவில் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நாம் கொள்வனவு செய்யும் எரிபொருளில் 65 சதவீதமானவை சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்தே பெற்றுக் கொள்ளப்படுகின்றன. 

ஏனைய 35 வீதமானவை சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன. 

இவை சுயெஸ் கால்வாய்க்கு உட்பட்டவையாகக் காணப்படுகின்றமையால் எமக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றார்.

-வீரகேசரி பத்திரிகை-(எம்.மனோசித்ரா)