மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டில் சாத்தியமில்லை என்கிறது அரசாங்கம்

மாகாணசபை முறைமையை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்தும் தேர்தலை நடத்துவதற்கான காலப்பகுதி குறித்தும் இன்றைய தினம் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும், இந்தியா மற்றும் சர்வதேச தரப்பின் அழுத்தங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் ஆளும் கட்சியின் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது. 

எவ்வாறு இருப்பினும் கொவிட் -19 நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி நெருக்கடிகள் காரணமாக இந்த ஆண்டில் தேர்தலை நடத்துவதில் சந்தேகம் உள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் ஆராய்ந்து வருகின்ற நிலையில், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய தரப்பினருக்கு அண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான ஜெனிவா பிரேரணையின் போது இலங்கை தொடர்பில் இந்தியா முன்வைத்துள்ள காரணிகள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் ஒன்று எடுக்கப்பட் வுள்ளது.

குறிப்பாக மாகணசபை தேர்தல் நடத்தப்படும் என்றால் விகிதாசார முறைமையில் நடத்துவதா அல்லது தொகுதிவாரி முறைப்படி தேர்தலை நடத்துவதா என்ற சிக்கல் நிலையொன்று நிலவுகின்ற நிலையில் அது குறித்தும், ஒரே நேரத்தில் சகல மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதா அல்லது பகுதி பகுதியாக தேர்தலை நடத்துவதா என்ற காரணிகளையும் அமைச்சரவை கூட்டத்தில் ஆராயவுள்ளதாக ஆளும் தரப்பினர் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.

இந்நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் குறித்து அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் உதய கம்மன்பிலவிடம் வினவியபோது அவர் கூறியதானது, பாராளுமன்றத்தில் இது குறித்த தெரிவுக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் நாட்டில் இன்னமும் கொவிட் -19 வைரஸ் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. அதேபோல் தேர்தலை நடத்துவதாயின் அதிகளவில் பணம் ஒதுக்க வேண்டும். அதற்கும் அரசாங்கம் தற்போது தயாரில்லை. எனவே இவ்வாறான நெருக்கடிகளில் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடத்துவது சாத்தியமானதா என சிந்திக்க வேண்டியுள்ளது. 

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாகணசபை தேர்தல் முறையாக நடத்தப்பட்டிருக்குமாயின் இப்போது நெருக்கடியை சந்திக்க நேர்ந்திருக்காது. ஆனால் ஜனநாயகம் என கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அவர்களின் ஆட்சியில் மக்களின் வாக்குரிமையை பரிந்துள்ளனர். எவ்வாறு இருப்பினும் இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் இல்லை, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தேர்தலை நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாவும் அவர் கூறினார். 

-வீரகேசரி பத்திரிகை- (ஆர்.யசி)