பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சமடையத் தேவையில்லை

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவே மேல் மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளன. 

சுகாதார பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சம் கொள்ள தேவையில்லை என கல்வி  அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வித்துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளன. சிறந்த திட்டமிடலுக்கு அமைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பித்தோம். 

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகளை முழுமயாக ஆரம்பிப்பதல் பல காரணிகள் தடையாக காணப்பட்டன.

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை கடந்த 10 ஆம் திகதி நிறைவுப் பெற்றது. பரீட்சை முடிவடைந்தவுடன் அதாவது மார்ச் 15 ஆம் திகதி தொடக்கம் மேல்மாகாண பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகளை முழுமையாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கவில்லை.

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகனை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது; இதற்கமைய மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் 5,11, மற்றும் 13 ஆகிய தர மாணவர்களின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் கடந்த  15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

1தொடக்கம் 4  ஆம் தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளையும், 6 தொடக்கம் 10 மற்றும் 12 ஆகிய தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளையும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

ஏப்ரல் 19 ஆம் திகதி வரை  காலம் தாழ்த்தல் அவசியமற்றது. என பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து மேல்மாகாணத்தில் உள்ள  அரச பாடசாலைகளில்  அனைத்து தரங்களினதும் கற்றல் நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்க  தீர்மானிக்கப்பட்டது. இதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் அனுமதி வழங்கியுள்ளது.

பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார  பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அனைத்து பாடசாலைகளுக்கும் சுற்று நிரூபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளை முறையாக பின்பற்றுவது கட்டாயமாகும். விளையாட்டு போட்டிகளை நடத்தல், விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுப்பட  ஆனுமதி வழங்கப்படவில்லை. இவ்விடயம் குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது.

பாடசாலைகளின் சுகாதார பாதுகாப்பு  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பெற்றோர் அச்சம் கொள்ள தேவையில்லை. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றிக் கொண்டு கல்வித்துறையை முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

-வீரகேசரி பத்திரிகை-(இராஜதுரை ஹஷான்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page