சீதனமாக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்களைக் கோரிய மணமகள்

பாகிஸ்தானைச் சேர்ந்த யுவதியொருவர், தனது திருமணத்துக்கான ‘மஹர்’  (சீதனம்)  அன்பளிப்பாக ஒரு இலட்சம் பாகிஸ்தான் ரூபா (சுமார் 1.28 இலட்சம் இலங்கை ரூபா.  47 இலட்சம் இந்திய ரூபா) பெறுமதியான புத்தகங்களை வழங்குமாறு தனது கணவரின் குடும்பத்தினரிடம் கோரியுள்ளார்.

நைலா ஷாமல் சாஃபி எனும் பெண்ணே இவ்வாறு பணத்துக்கு பதிலாக புத்தகங்களைக் கோரியுள்ளார்.

கைபர் பக்துன்கவா மாகாணத்தின் மர்தான் நகரைச் சேர்ந்த நைலா ஷாமல் சாஃபி, சஜாத் ஜ்வான்தூனை  (Sajjad Jwandoon  ) அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.

இஸ்லாமிய பாரம்பரிய திருமண சம்பிரதாங்களின்படி, திருமணத்தின்போது மணமகனின் குடும்பத்தினர் மணமகளுக்கு பணம், பொருட்களை வழங்குவது வழக்கம். இது மஹர் என அழைக்கப்படுகிறது.

ஆனால், தனக்கு பணத்துக்கு பதிலாக புத்தகங்களை கேட்டு வாங்கியுள்ளார் நைலா ஷாமல்.

புதுமணத் தம்பதிகளான  நைலா ஷாமல் சாஃபி (Naila Shamal Safi ) , சஜாத் ஜ்வான்தூன் இருவரும் கல்விமான்கள், கவிஞர்கள், நைலா ஷாமல் கலாநிதி பட்டம் பெற்றவர். அவரின் கணவர் சஜாத் ஜ்வான்தூனும் கலாநிதி  பட்டம் பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புத்தகங்கள் வாசிப்பதை ஊக்குவிக்கவும், சீதன வழங்குவது எதிராகவும் இவர்கள் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மஹராக புத்தங்களை தான் கோரியமை தொடர்பில் வீடியோ ஒன்றை நைலா ஷாமல் சாஃபி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘எனது கணவரின் குடும்பத்தினர்,, மஹராக என்ன வேண்டும் என பட்டியலிடுவதற்கான படிவத்தை எனக்குக் கொடுத்தனர். நான், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்கள்’ என எழுதினேன். எனது கோரிக்கையை மாற்றிக் கொள்வதற்கு 15 நிமிட அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், நான் உறுதியாக இருந்தேன். மாற்றம் எதுவுமின்றி அந்த ஆவணத்தை திருப்பிக்கொடுத்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

‘பெரும்பாலானோர் 100,000 முதல் 200,000 ரூபா பணம், காணி மற்றும் ஏனைய விடயங்களை மஹராக கோருகின்றனர். இது ஒரு சமூகத் தீமையாக உள்ளது’ என நைலா ஷாமல் கூறியுள்ளார்.

தான் ஒரு கவிஞரும் கல்விமானும் என்ற வகையில், புத்தகங்கள் அல்லது  மணமகள், மணமகன் குடும்பத்தினரால் தாங்கிக்கொள்ள கூடிய செலவிலான பொருட்களை கோருவததை ஊக்குவிப்பதற்கு தான் விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.